×

பூலோக கற்பகவிருட்சம் எனப்படும் பனைமரங்கள்

தென்னிந்தியாவின் தொன்மையான மரங்களில் முதன்மைபெற்ற ஒன்று பனைமரம். இதன் அனைத்து பாகங்களும் பயன்படுகின்றன. ஓலைகள் கூரை வேய்வதற்கும், ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்கவும், பழங்கள் (நுங்குகள்) உணவாகவும் பயன்படுகின்றன. பனைமரங்களைப் பிளந்து வீட்டிற்கு உத்திரமாகப் பயன்படுத்துகின்றனர். பனையில் தாலி, கல்பனை, தாடகை எனப் பலவகைகள் உள்ளன. பனைமரப் பாளையை வெட்டி அதிலிருந்து வடியும் நீரைப் பதனீர், கள் எனப் பலவகையான பானங்களாகப் பயன்படுத்துகின்றனர். இம்மரத்தைப் பூலோக ‘‘கற்பக விருட்சம்’’ என்று போற்றுகின்றனர்.

தொண்டை நாட்டுத்தலமான திருவோத்தூரில் (செய்யாறு) ஓர் அடியார் சிவபெருமானுக்குப் பனம் பழங்களைப் படைக்க விரும்பினார். அதற்காக ஆலயத்தில் பனைமரங்களை நட்டார். அவையாவும் ஆண் மரங்களாக இருந்து காய்க்காமல் போயின. அவர் வருத்தமுற்றார். அச்சமயம் தலயாத்திரையாக, திருஞானசம்பந்தர் திருவோத்தூருக்கு எழுந்தருளினார். அந்த அடியவர் ஞானசம்பந்தரை வணங்கி சிவ வழிபாட்டிற்காக வைத்த பனைமரங்கள் ஆண் பனைமரங்களாகிக் காய்க்காமல் போனதைக் கூறிவருந்தினார். திருஞானசம்பந்தர் இத்தலத்துச் சிவபெருமானை வணங்கி ‘‘பூர்த்தேர்ந் தாயென’’ எனும் முதலடியைக் கொண்ட பதிகப் பாடலைப் பாடினார். இதன் இறுதி பாடலில் குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என்று அருளிச் செய்தார். இப்பதிகம் முடியும் போது அங்கிருந்த ஆண் பனை மரங்கள் யாவும் பெண் பனைகளாகிப் பூத்து காய்த்து கனிந்து கனிகளை உதிர்ந்தன. இதைக் கண்ட அனைவரும் அதிசயித்தனர்.

இந்த வரலாற்றை நினைவுகூறும் வகையில் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய மண்டபத்தில் பூத்துக் காய்த்து பழம் தந்த பனைமரம் அதனடியில் சிவலிங்கம் திருஞானசம்பந்தர் ஆகிய திருவுருவங்களைக் கருங்கல்லால் நுண்மையான வேலைப்பாட்டுடன் செய்து வைத்துள்ளனர். தேவாரத்துள் வலம்புரம் என்று போற்றப்படும் திருத்தலம் இந்நாளில் மேலைப் பெரும்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தலவிருட்சம் பனையாகும். வலம் எனும் சொல்லுக்குப் பனை என்பதும் பொருள். விழுப்புரத்திற்கு அருகில் பனைமலை என்னும் சிற்றூரும் அதையொட்டி ஒரு சிறுகுன்றும் உள்ளன. குன்றின் மீது பல்லவர்கள் கட்டிய கலையழகு மிக்க சிவாலயம் உள்ளது. இறைவன் தாலகிரீஸ்வரர் (பனைமலை நாதர்) என்றழைக்கப்படுகிறார்.

சன்னாநல்லூருக்கு அருகிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் பனையூர் ஆகும். இறைவன் சௌந்தர் யேசுவரர், அம்பிகை பெரிய நாயகி இத்தலத்தில் ஆண் பனை பெண் பனைமரங்கள் இணைந்து வளர்ந்துள்ள அதிசயத்தைக் காணலாம். பிராகாரத்தில் பராசர முனிவர் வழிபட்ட தாலவனேஸ்வரர் உள்ளார். இடப்புறம் தலவிருட்சங்களான பனைமரங்கள் வலதுபுறம் திருஞானசம்பந்தர் பாட கனியுதிர்க்கும் பனைமரமும் சிவலிங்கமும் கல்லான ஐதீகக் காட்சி. திருஓத்தூர் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பனங்காடு எனப்படும் வன்பார்த்தான் பனங்காட்டூரில் அகத்தியரும், புலத்தியரும் பனை மரத்தடியில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதாகத் தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் உள்ள ஆலயத்தில் இரண்டு கருவறைகளும் இரண்டு பனை மரங்களும் உள்ளன. கருவறைச் சுவரில் பனை மரத்தடியில் சிவலிங்கத்தை அகத்தியரும் புலத்தியரும் பூஜித்துக் கொண்டிருக்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு எதிரிலுள்ள தீர்த்தம் ஜடாகங்கை என்பதாகும். இதன் தென் கரையில் முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவரைப் பனையடிப்பன் என்றழைக்கின்றனர். பனையின் வகையிலிருந்து திரிந்தது கச்சூரி எனப்படும் ஈச்சமரமாகும். திருக்கச்சூர் கோயிலின் தலமரம் ஈச்ச மரமாகும். இவ்வூரிலுள்ள விநாயகர் கருக்கடி விநாயகர் என்று அழைக்கப்படுகின்றனர். கருக்கு என்பது கத்திபோன்ற கூரான நுனிகளை உடைய பனை மட்டையின் பெயர். பனை மரத்தின் பெருமைகளை விளக்கி திருக்குடந்தை அருணாசலக் கவிராயர் என்பவர் ‘‘தால விலாசம்’’ எனும் நூலைப் பாடியுள்ளார். இதில் 801க்கும் அதிகமான வகையில் பனைமரமும் அதன் பாகங்களும் மக்களுக்குப் பயன்படுவது பற்றி விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.

The post பூலோக கற்பகவிருட்சம் எனப்படும் பனைமரங்கள் appeared first on Dinakaran.

Tags : South India ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு