×

“உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” :கவிஞர் வைரமுத்து உருக்கம்

சென்னை : “உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உதயம் திரையரங்கின் பயணம் நிறைவு பெறுகிறது. சென்னை அசோக் நகரில் 1983-ம் ஆண்டில் 1.3 ஏக்கரில் உதயம் திரையரங்கு கட்டப்பட்டது. இந்தத் திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களின் படங்களை திரையிட்ட பெருமை உதயம் தியேட்டருக்கு உண்டு.

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்-ன் படங்கள் வெளியாகும்போது கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். கடந்த சில ஆண்டுகளாக திரையரங்கிற்கு பார்வையாளர்களின் வருகை குறைந்து வந்த நிலையில் அந்த இடத்தை பிரபல கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளது.உதயம் திரையரங்கு வளாகம் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை வாங்கும் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளம் வணிக நிறுவனங்களுக்காக ஒதுக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,

ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது

முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன

மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது

இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்

நன்றி உதயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” :கவிஞர் வைரமுத்து உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu Urukkam ,Chennai ,Udayam ,Vairamuthu ,Theatre ,Ashok Nagar, Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...