×

செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன: மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பரபரப்பு வாதம்

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன என்று அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிட்டார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி அவரது சார்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிடும்போது, டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என்று அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. சந்தேகத்துக்கு இடமின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். சோதனையின் போது 5 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அமலாக்க துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா?. பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்கு தப்பி விடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது.

தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதை தொடர்ந்து அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன என்றார். தொடர்ந்து அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

The post செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன: மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பரபரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Aryama Sundaram ,CHENNAI ,minister ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...