×

முதல் பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதி வெற்றிக்கு தமிழ்வழி கல்விக்கு முதல்வர் தந்த 20% இடஒதுக்கீடுதான் காரணம்: பள்ளி ஆசிரியை நெகிழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை புலியூர் கிராமத்தை சேர்ந்த இளம் பட்டதாரி ஸ்ரீபதி (23), முதல் முயற்சியிலேயே உரிமையில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று பழங்குடியின சமூகத்தில் இருந்து முதல் நீதிபதியாக உள்ளார். குழந்தை பெற்ற 2வது நாளிலேயே தேர்வு எழுதி மன உறுதியுடன், மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ள ஸ்ரீபதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள், தங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவ்வாதுமலை பகுதி அரசவெளி மலை கிராமத்தில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மகாலட்சுமி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்வழி கல்வி படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டின் பயன் என பெருமிதத்துடன் தமது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ஜவ்வாதுமலையை சேர்ந்த ஸ்ரீபதியின் இந்த வெற்றியால், நாங்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது.

குழந்தை பிறந்த 2வது நாளில் தேர்வு எழுத சென்றதும், அதில் தேர்ச்சி பெற்றதும் மிகப்பெரிய வெற்றியாகும். ஜவ்வாதுமலையின் அடையாளமாக பதி மாறியிருக்கிறார். ஜவ்வாதுமலை மீது இருந்த எதிர்மறையான பிம்பத்தை ஸ்ரீபதி மாற்றியிருக்கிறார். அவரை முன்னுதாரணமாக கொண்டு ஜவ்வாதுமலையில் உள்ள பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். தங்களுடைய திறமை என்ன என்று அறிந்து, சமூகத்துக்கு தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும். ஜவ்வாதுமலையை சேர்ந்த ஸ்ரீபதி நீதியரசியாக உயர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளையும் வாழ்வியலையும் தமது தீர்ப்பின் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதற்காக, எங்களுடைய அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறோம். குறிப்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் அளிக்கப்படும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு எனும் அரசாணை, கலைஞர் வழியில் முதல்வர் கொண்டுவந்தது, ஸ்ரீபதியை இந்த நிலைக்கு உயர்த்துவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. தமிழ் வழி கல்வி என்றால் ஏளனமாகவும், ஆங்கில வழி கல்வி படிப்பது உயர்வானதாகவும் கருதும் எண்ணங்களை எல்லாம் ஸ்ரீபதியின் வெற்றி மாற்றியிருக்கிறது. தமிழ் வழியில் படித்தால் ஜெயிக்க முடியும். எந்த பதவிக்கும் போக முடியும், இந்தியாவின் உச்ச பட்ச பதவிகளையும் அடைய முடியும் என ஸ்ரீபதி உறுபடுத்தியிருக்கிறார். அதற்காக, தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முதல் பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதி வெற்றிக்கு தமிழ்வழி கல்விக்கு முதல்வர் தந்த 20% இடஒதுக்கீடுதான் காரணம்: பள்ளி ஆசிரியை நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Sreepathi ,Leschi ,Thiruvannamalai ,Sripathy ,Javvadumalai Puliyur ,Tiruvannamalai district ,CM ,medium ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...