×

அரியானா எல்லையில் 2வது நாளாக பதற்றம் விவசாயிகள் மீது போலீஸ் மீண்டும் தாக்குதல்: பஞ்சாப்பில் இன்று ரயில் மறியல் போராட்டம்

சண்டிகர்: தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது பஞ்சாப்-அரியானா ஷம்பு எல்லையில் 2வது நாளாக நேற்றும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதால் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவியது. போலீசாரின் இந்த அடக்குமுறையை கண்டித்து பஞ்சாப்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றிய அரசு தந்தது.

அதன்பேரில் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். ஆனால், சுமார் 4 ஆண்டாகியும் எந்த வாக்குறுதியையும் ஒன்றிய அரசு நிறைவேற்றாத நிலையில், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த ‘டெல்லி சலோ’ பேரணிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. தலைநகர் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைவதை தடுக்க பஞ்சாப், அரியானா, உபி மாநில எல்லைகள் முழுவதிலும் போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு, சிமெண்ட் தடுப்புகள், இரும்பு வேலிகள், ஆணிகள் பதித்த தடுப்புகள் அமைத்து அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. பல சாலைகள் சீல் வைத்து மூடப்பட்டன. குறுகிய சாலைகள் உள்ள பகுதிகளில் டிராக்டர் வராமல் தடுக்க ஆங்காங்கே பொக்லைன் மூலம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டன.

விவசாய சங்கங்களுடன் ஒன்றிய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திட்டமிட்டபடி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 1 லட்சம் விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர். அவர்களை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியதால் பல பகுதிகளில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, பஞ்சாப்-அரியானா ஷம்பு எல்லையில் நடந்த மோதலில் போலீசார் டிரோன் மூலமாக கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்து விவசாயிகளை விரட்டினர். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், எல்லையிலேயே தங்கிய விவசாயிகள் 2வது நாளாக நேற்றும் டெல்லி நோக்கி புறப்பட முயற்சித்தனர். பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகள் ஷம்பு எல்லையில் தொடர்ந்து குவிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பல கிமீ தொலைவுக்கு டிராக்டர்கள் வரிசை கட்டி நின்றன. விவசாயிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அருகே கூடியதைத் தொடர்ந்து நேற்றும் விவசாயிகள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதே போல, அரியானா ஜிந்த் மாவட்டத்தில் உள்ள டேட்டா சிங்வாலா-கனவுரி எல்லையிலும் விவசாயிகள் தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

ஷம்பு எல்லையில் நேற்று நடந்த மோதலில் போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சில விவசாயிகளுக்கு ரப்பர் குண்டு காயங்களும் ஏற்பட்டுள்ளன. போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டால் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். போலீசார் தடுத்தாலும் விவசாயிகள் தொடர்ந்து பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் தங்கியிருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. போலீசாரின் இந்த அடக்குமுறையை கண்டித்து, பஞ்சாப்பில் இன்று பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய கிசான் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரியானாவில் வன்முறை பரவுவதை தடுக்க சில பகுதிகளில் இன்டர்நெட் சேவை இன்று வரை துண்டிக்கப்பட்டுள்ளது.

* இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு இதுவரை நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தற்போது விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லியில் நேற்று ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா உள்ளிட்ட மூத்த ஒன்றிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதில், விவசாயிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து சம்யுக்தா கிசான் மோர்சா தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் அளித்த பேட்டியில், ‘‘3ம் கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (இன்று) மாலை நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நிதின் ராய் கலந்து கொள்வார்கள்’’ என்றார்.

* சிங்கு எல்லையில் பயணிகள் தவிப்பு
அரியானாவின் சோனிபட்டிலிருந்து டெல்லியை இணைக்கும் சிங்கு எல்லை, கடந்த முறை விவசாயிகளின் முக்கிய போராட்ட களமாக இருந்தது. இதனால் அங்கு தற்போது கடுமையான தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர். போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சோனிபட்டிலிருந்து வரும் பயணிகள், மக்கள் சிங்கு எல்லைக்கு முன்பாக இறக்கி விடப்படுகின்றனர். இதனால் அவர்கள் நடந்தோ, ஆட்டோவிலோ தான் எல்லையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. விவசாயிகள் சிங்கு எல்லையை நெருங்கிவிட்டதால் இப்பாதைகளும் அடைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று இப்பகுதியில் 8 மாத கர்ப்பிணி சிக்கிக் கொண்டு, வேறு வழியில்லாமல் நடந்தே சென்றார்.

* காயமடைந்த விவசாயியுடன் பேசிய ராகுல்
அரியானாவின் ஷம்பு எல்லையில் போலீசார் தாக்குதலில் காயமடைந்து, பாட்டியாலா மாவட்டம் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குர்மீத் சிங்குடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.

* போலீசாருக்குள் எல்லை பிரச்னை
ஷம்பு எல்லையானது அரியானா, பஞ்சாப் இரு மாநில எல்லைக்கும் பொதுவானதாக உள்ளது. இங்குள்ள பஞ்சாப் எல்லைக்குள் அரியானா மாநில போலீசார் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி வருகின்றனர். இதற்கு பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர்.

* கண்ணீர் புகைகுண்டை சமாளிக்க ஈர சாக்குபை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ‘‘சாக்குப் பைகளை ஈரமாக்கி வைத்துள்ளோம். அவற்றை கண்ணீர் புகை குண்டுகள் மீது போட்டால், அவை புகைகளை வெளியிடாது. மேலும், பூச்சிக் கொல்லி தெளிக்க பயன்படுத்தும் தெளிப்பான்களில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம். இதனை கொண்டு புகை குண்டுகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தாலும் அவை செயல்படாது’’ என்றனர்.

* காற்றாடி பறக்கவிட்டு டிரோனை தடுத்த விவசாயிகள்
டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி விவசாயிகளை கலைக்க முயன்ற போலீசாரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. கண்ணீர் புகை குண்டுக்கு சற்றும் அசராத பஞ்சாப்பின் இளம் விவசாயிகள் போலீசார் ஏவிய டிரோன்களுக்கு போட்டியாக காற்றாடிகளை பறக்க விட்டனர். காற்றாடிகள் மூலம் டிரோன்களை விரட்டி அடிப்போம் என்றனர்.

The post அரியானா எல்லையில் 2வது நாளாக பதற்றம் விவசாயிகள் மீது போலீஸ் மீண்டும் தாக்குதல்: பஞ்சாப்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariana border ,strike ,Punjab ,Chandigarh ,Delhi ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து