×

முதல்வருடன் பேச்சுவார்த்தை சுமூகம் இன்று நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததையடுத்து இன்று நடக்க இருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தலைமைச் செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி: கடந்த 3 ஆண்டு காலத்தில் 4வது பட்ஜெட் கூட்டம் நடக்க இருக்கிறது. கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 15ம் தேதி (இன்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், அதன் தொடர்ச்சியாக 26ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்துவது என்று ஜாக்டோ-ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து, ஜாக்டோ-ஜியோ பிரதிநிதிகள் 26 பேருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையின் போது. எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். 3 அமைச்சர்களுடன் பேச வைத்த நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், களநிலவரம் மற்றும் நிதிநிலை குறித்தும் உத்தேசித்து எங்கள் போராட்டம் குறித்து மறு பரிசீலனை செய்வதாக அறிவித்தோம். அதன்பேரில் தற்போது சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடந்து ெகாண்டு இருக்கும் போதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 30 ஒருங்கிணைப்பாளர்களையும் முதல்வர் அழைத்துப் பேசினார்.

அப்போது, உங்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து 3 அமைச்சர்களும் என்னிடம் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்;நீங்களும் கூறுங்கள் என்று கேட்டார். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை திமுக மறுபடியும் வழங்கும் என்று நீங்கள் தெரிவித்ததை மற்ற மாநிலங்கள் அறிவித்துவிட்டன என்று முதல்வரிடம் தெரிவித்தோம். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கூறும்போது நான் கொடுக்காமல் யார் கொடுக்கப் போகிறார்கள் என்று கூறியதுடன் நில்லாமல் பழைய ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை பொருத்தவரையில், நிதிநிலை சீரடைந்த பிறகு உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றும், அந்த நம்பிக்கையோடு செல்லுங்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் செவிசாய்க்காத அரசைக்காட்டிலும், தற்போது இந்த அரசு அழைத்துப் பேசியதுடன், கோரிக்கைகளை மறக்கவில்லை, மறுக்கவில்லை என்று கூறி சிலவற்றை நிறைவேற்றியுள்ளது. அதனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் முதல்வர் அளித்த பதிலின் மீது நம்பிக்கை வைத்து நடக்க இருக்கின்ற போராட்டத்தை நாங்கள் ஒத்தி வைத்து, மீண்டும் அவருடன் பேசுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை அறிவிக்கிறோம். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்தார்.

* ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 30 ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து முதல்வர் பேசினார்.
* பழைய ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
* நிதிநிலை சீரடைந்த பிறகு கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார்.
* இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று நடத்த விருந்த போராட்டத்தை ஒத்திவைத்தது.

The post முதல்வருடன் பேச்சுவார்த்தை சுமூகம் இன்று நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Jacto-Jio ,CHENNAI ,M.K.Stalin ,Anbarasu ,Dinakaran ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...