×

திருப்புக்குழி, முசரவாக்கம் ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள்: காஞ்சி கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புக்குழி, முசரவாக்கம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்தவகையில், திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.93.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து, பள்ளியில் உள்ள தொழில்நுட்ப வகுப்பறையை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்து, மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார். இதையடுத்து திருப்புக்குழி பெருமாள் கோயில் தெருவில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிசி சாலையினையும், புதூரில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் 3 மீ தூரத்துக்கு அமைக்கப்படும் பாலம் கட்டுமான பணியை பார்வையிட்டார். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அண்ணாநகர் குறுக்கு தெருவில் ரூ.9.35 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிசி சாலையை ஆய்வு செய்தார்.

இதுபோல் முசரவாக்கம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீட்டு வசதி குடியிருப்பு, அயோதிதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் மாணிக்கம் நகரில் போடப்பட்ட சிமென்ட் சாலை, பிள்ளையார் கோயில் தெருவில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை, முசரவாக்கத்தில் ரூ.35.45 லட்சம் மதிப்பீட்டில் பெரியஏரி வரத்து கால்வாய் மற்றும் ரூ.36.36 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 1600 மீ ஓடை கால்வாய் ஆழப்படுத்தும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post திருப்புக்குழி, முசரவாக்கம் ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள்: காஞ்சி கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruppukuzhi ,Musaravackam Panchayats ,Kanchi ,Kanchipuram ,District Collector ,Kalachelvi Mohan ,Musaravackam ,Panchayats ,Kanchipuram Union ,Tiruppukuzhi Panchayat Union Primary School ,
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி