×

சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு: போலீஸ் விசாரணை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்றிரவு புதுடெல்லிக்கு செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தயார்நிலையில் இருந்தது. இதில் செல்ல வேண்டிய 159 பயணிகளும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். பின்னர் விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, விமானத்தை ஓடுபாதையில் இயக்க விமானிகள் தயாராகினர். அப்போது திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறந்தால் ஒலிக்கக்கூடிய அலாரம் ஒலிக்கத் துவங்கியது. அதிர்ச்சியான விமானிகள், விமானத்தை நிறுத்தி, அவசரகால கதவை திறந்தது யார் என்று தீவிரமாக விசாரித்தனர். அவசரகால கதவு அருகே அமர்ந்திருந்த பயணி, நான் விமானத்தை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பட்டனை அழுத்தவில்லை. ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று பட்டனை அழுத்தினேன்.

இதனால் அபாய மணி ஒலித்துவிட்டது. நான் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்வதால், அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் எனத் தெரியாது என்று விளக்கினார். எனினும், அவரது விளக்கத்தை விமானிகள் மற்றும் ஊழியர்கள் ஏற்கவில்லை. இதனால் அப்பயணியை விமானத்தில் இருந்து கீழே இறக்கி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 158 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. விமானநிலைய போலீசார் நடத்திய விசாரணையில், அவசர கால கதவை திறந்த பயணி உ.பி மாநிலத்தை சேர்ந்த சரோஸ் (27) என்பது தெரியவந்தது.அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

The post சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Delhi ,Meenambakkam ,IndiGo Airlines ,Chennai Airport ,New Delhi ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்