×

காட்டுப்பன்றி தொல்லையை தடுக்க கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்

அருப்புக்கோட்டை : காட்டுப்பன்றிகளின் தொல்லையை கட்டுப்படுத்த சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ வள்ளிக்கண்ணு தலைமை வகித்தார். ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ரமணன், காரியாபட்டி தாசில்தார் மாரீஸ்வரன், அருப்புக்கோட்டை தாசில்தார் செந்தில்வேல், திருச்சழி தாசில்தார் பாண்டிசங்கர்ராஜ், வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர் சம்பந்தமூர்த்தி, கால்நடை உதவி மருத்துவர் சர்மிளாபிரியா மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயி மச்சேஸ்வரன் பேசுகையில், காட்டுப்பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் சீமைகருவேல மரங்கள் அதிகம் உள்ளது. அகற்றாத காரணத்தினால் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவில்லை. மேலும் ஆர்டிஓ தலைமையில் நடக்கும் கூட்டத்திற்கு யூனியன் பிடிஓக்கள், இன்ஜினியர்கள் வருவதில்லை. யூனியனில் உள்ள குறைகளை யாரிடம் சொல்வது? என்று கேள்வி எழுப்பினார்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசாமி கூறுகையில், வனத்தில் உள்ள வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு நடத்துவது போல வனத்திற்கு வெளியே உள்ள காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்திடவும் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரியாபட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார். மேலும் விவசாயிகள், மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. கண்மாய்களில் வரத்து கால்வாய் மதகு, கலுங்கு ஆகியவற்றை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

The post காட்டுப்பன்றி தொல்லையை தடுக்க கருவேல மரங்களை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kuradithir ,Aruppukkottai ,Farmers Grievance Day ,Aruppukkottai RTO ,RTO ,Dinakaran ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...