×

வீடுகளுக்கு முன் பசுஞ்சாணம் கரைத்து ஏன் தெளிக்கிறோம்?

தெளிவு பெறு ஓம்

வீடுகளுக்கு முன் பசுஞ்சாணம் கரைத்து ஏன் தெளிக்கிறோம்?

– சுனில்குமார், நாகை.

பதில்: இப்பொழுது யார் தெளிக்கிறார்கள்? அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாசல் தெளித்து கோலம் போடுவது என்பது சிரமம். பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு உரியவர்கள் தூங்க, யாரோ வேலைக்கார அம்மா ஒரு வாளி தண்ணீரை கொட்டி விட்டு போவது தான் வாசல் தெளித்தல் என்று இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். வாசல் தெளித்து கோலம் போடுவதில் எத்தனை விஷயங்கள் இருக்கிறது?

1. காலையில் எழுவது
2. குனிவதும் நிமிர்வதுவதுமான பயிற்சி
3. வாசல் தூய்மை
4. கோலம் என்கிற கலை
5 கோல மாவின் (அரிசி மா) மூலம் பல்லுயிர் ஓம்புதல்
6. கூட்டி, கோலம் போட்ட வீட்டிற்கு முன் நிற்கும்போது வீட்டின் மங்கள கரமான தோற்றம்
7. அந்த மங்களகரமான தோற்றத்தை பார்த்துக் கொண்டே செல்பவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி புத்துணர்ச்சி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

வாசல் தெளித்து கோலம் போடுவதில் எவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளது. அதுவும் பசுஞ்சாணம் விசேஷமானது. கண்ணுக்குத் தெரியாத, நோயை உருவாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி பசுவின் சாணத்திற்கு உள்ளது. இப்போது பசுவை யார் வளர்க்கிறார்கள்? நல்ல விஷயங்களை நாகரீகப் போர் வையில் விட்டு விட்டோம். அதில் இதுவும் ஒன்று.

? ‘‘பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை. நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்தப் பணக்காரனும் தயாராக இல்லை” இது சரிதானா?
– வே.திருமூர்த்தி, தர்மபுரி.

பதில்: பஞ்ச் டயலாக் போல இந்த கருத்து முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் வலம் வருகிறது. அநேகமாக சரியான கருத்து போல் தோன்றும். அதுவும் பணம் முக்கியம் என்று ஒரே குறிக்கோளோடு இருப்பதால், ‘‘அட சரி தானே’’ என்று தோன்றும். ஆனால் உண்மையில் இக்கருத்து சாரம் இல்லாத கருத்து. பணம் என்பது ஒரு செலாவணி. ஒரு பொருள் (material). நிம்மதி என்பது ஒரு மனநிலை (state of mind). சில தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சில சங்கடங்களில் இருந்து விடுபடவும் பணம் தேவைப் படுகிறது.

ஆனால் அதுவே பூரண நிம்மதியைத் தராது. பணம் என்கிற விஷயம்தான் நிம்மதியைத் தருவது அல்லது நிம்மதியை இழக்கச் செய்வது என்கிற முடிவுக்கு வந்தால் மட்டுமே கேள்வியில் சொன்ன கருத்து சரியாக இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை. இருவரும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இப்போது பணத்தைத் தந்து அவர்கள் விரும்புகின்ற நிம்மதியைத் தர முடியுமா? (பணம் மட்டுமே அந்த சங்கடத்திற்குக் காரணமாக இருந்தால், பணத்தை வைத்து சரி செய்யலாம்) பணம் அதிகமாக வைத்துக் கொண்டிருக்கும் பணக்காரர்களுக்கு அந்த பணம், நிம்மதியான உறக்கத்தைத் தந்து விடுகிறது என்பது சர்வ நிச்சயமான ஒரு விஷயமா? இல்லையே.

மனிதனின் நிம்மதிக்கு சில நேரங்களில் பணமும் ஒரு காரணமே தவிர, பணம் மட்டுமே நிம்மதியைத் தராது. சில குறிப்பிட்ட ஆசிரமங்களில் சென்று பாருங்கள். கோடிக்கணக்கான சொத்தை தர்மத்திற்கு எழுதி வைத்துவிட்டு, நிம்மதிக்காக கண்மூடி அமர்ந்திருப்பவர்களைக் காணலாம். ஏழை தேவைக்காக பணத்தைத் தேடுகிறான். பணக்காரன் தேவை என்று நினைத்து பணத்தைத் தேடுகின்றான். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. இன்றைக்கு 100 ரூபாய் தேவை. அது கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி. அப்படி இருப்பவனை நாம் ஏழை என்ற பட்டியலில் சேர்த்து விடுகிறோம்.

பல கோடி உண்டு. திட்டம் போட்டு இன்னும் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற கடுமையாக செயல்படுகிறார். அவரை பணக்காரன் பட்டியலில் சேர்த்து விடுகின்றோம். ஒரு ஏழையின் பணத்தேவையை ஒரு பணக்காரனால் நிறைவேற்ற முடியும். ஆனால் பணக்காரனின் தேவைக்கு எல்லை எது? அவன் தேவையை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது, ஏன் கடவுளால்கூட நிறைவேற்ற முடியாது, அவனுக்கு பேர்தான் இன்றைக்கு நாம் சொல்லும் பணக்காரன். அதாவது நிம்மதி இல்லாதவன்.

? ஒருவன் தன்னம்பிக்கை குறைந்தவராக இருக்கிறான் என்பதை எப்படி அறிவது?
– முத்துக்கண்ணு, வியாசர்பாடி.

பதில்: மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். தன்னம்பிக்கை குறைவு உள்ளவன் பொறாமை உள்ளவனாக இருப்பான். பொறாமை என்கிற ஆமை மட்டும் உள்ளத்தில் புகுந்து விட்டால், அதைவிட ஆபத்து எதுவும் இல்லை பொறாமை என்பது என்ன தெரியுமா? நம்மிடம் இல்லையே என்று நினைப்பதல்ல பொறாமை. அவனிடம் இருக்கிறதே என்று துடிப்பது தான் பொறாமை. துரியோதனனின் பொறாமை உணர்வுதான் அவனை அழித்தது. துரியோதனனின் பொறாமை உணர்வுக்கு காரணம் தன்னம்பிக்கையின்மை.

? ஆன்மிக உணர்வு நமக்கு எப்படிப்பட்ட மனதைத் தரும்?
– சி.வரதராஜன், சேலம்.

பதில்: இதற்கு விவேகானந்தர் சொல்கிற பதிலை உங்களுக்கு நான் தருகின்றேன். ஆன்மிக மனம் உள்ளவர் எதையும் எதிர்கொள்ளும் திடத்தோடு இருப்பார். ‘‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’’ என்ற வரியை நினைத்துப் பாருங்கள். ‘‘என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள். இன்பம், துன்பம் எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்துவிடாதே’’ என்கிறார் விவேகானந்தர். ஆன்மிகம் கற்றுத்தரும் பாடம் இதுதான்.

வாழ்க்கையை மிக எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் கலைதான் ஆன்மிகம் என்பதை மறந்து விடக்கூடாது. அது சொர்க்கத்தை காட்டுவது என்பது இருக்கட்டும். இருக்கின்ற வாழ்வின் நரக வேதனையை மாற்றுவது என்பதை மறந்துவிட வேண்டாம்.

? யசோதை என்பதற்கு என்ன பொருள்?
– சாருமதி, கோவை.

பதில்: யஸஸ் என்றால் புகழ். யஸோதா என்றால் புகழ் உடையவள். பாபநாசம் சிவன் அற்புதமான கீர்த்தனைகளை எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் ஒரு கீர்த்தனையில் யசோதையின் புகழை இப்படிப் பாடுகிறார்.

என்ன தவம் செய்தனை யசோதாஎங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றைழைக்க என்பது பல்லவி.

அதாவது பரப்பிரம்மத்தை குழந்தையாக அடைந்த புகழ் அவளைத்தவிர யாருக்குண்டு.?

“ஈரேழு புவனங்கள் படைத்தவனை, கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட, என்ன தவம் செய்தனை யசோதா?” என்று எழுதியிருக்கிறார் யசோதை என்றால் தவம் செய்தவள் என்ற பொருளும் ஆகிறது யசோதையின் கண்ணழகைக் கண்டு ‘‘ஏரார்ந்த கண்ணி யசோதை’’ என்று பாராட்டுகிறாள் ஆண்டாள் கண்ணனைப் பார்த்துப் பார்த்து அழகு படைத்த கண்ணை உடையவள் யசோதை என்று பொருள்.

நல்ல விஷயங்களைப் பார்ப்பது கண்ணுக்கு அழகு.
நல்ல விஷயங்களை பேசுவது வாய்க்கு அழகு.
நல்ல விஷயங்களைக் கேட்பது காதுக்கு அழகு.
நல்ல விஷயங்களை நினைப்பது நெஞ்சுக்குழகு.

இந்த அழகுகள் பெற வேண்டுமென்றால், இந்த விஷயங்களை எல்லாம் யசோதையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

? தவறு கண்டால் என்ன செய்ய வேண்டும்?
– ரெங்கமணி, திருப்பட்டூர்.

பதில்: உரியவர்களிடம் பக்குவமாகச் சொல்லித் திருத்த முயல வேண்டும். ஊரெல்லாம் சொல்லி பெரிது படுத்த கூடாது. ஆண்டாள் இதனைத் தான் ‘‘தீக்குறளை சென்றோதோம்’’ என்றாள். மற்ற தீயை விட வதந் ‘‘தீ” வேகமாகப் பரவி விடுகிறது.

? நிதானமாக வாழ்வதற்கு என்ன வழி?
– ஜெயலட்சுமி, கோரிப்பாளையம்.

பதில்: ஒரே வழிதான். வாழ்வில் வெற்றியும் தோல்வியும் வரும். இதயத்துக்கு தோல்வி போகக்கூடாது வெற்றி தலைக்கு போகக்கூடாது.

? உண்மை பொய். இதில் அதிகம் பேர் உண்மையைவிட பொய் தானே பேசுகிறார்கள்?
– ராகவன், உடுமலைப்பட்டி.

பதில்: உண்மை என்பது மிக எளிதானது. ஆனால் ஏதேதோ காரணங்களுக்காக அது சிக்கலானதாக ஆகிவிடுகிறது. ஜோடனையோடு கூடிய பொய் பெரும்பாலும் உண்மையாக மாறிவிடுகிறது. காந்தியடிகள் சொல்வார். ‘‘உண்மை என்பது இறுதியில் அடைய வேண்டிய முடிவு அல்ல. அதுவே வாழ்வின் அனுபவம்’’ என்பார். அதிகம் பேர் ஏன் பொய் சொல்கிறோம் என்று சொன்னால் இரண்டு காரணங்கள்.

1. அது எளிதாக இருக்கிறது.

2. பல சந்தர்ப்பங்களில் அப்போதைக்கு தப்பிக்க வைக்கிறது.

ஆனால் ஒன்று. நாம் சொன்ன பொய் உலகிற்குத் தெரிய வரும்போது, நாம் அதுவரை சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு இடமாகிறது.

? பிரச்னைக்கு பெரும்பாலும் எது காரணமாக இருக்கிறது?
– ஆனந்தராஜ், வேதாரண்யம்.

பதில்: வாய்தான். பேச்சுதான். குடும்பத்தில் ஆரம்பித்து நாடு வரை பேச்சு பிரச்னைகளை உண்டாக்கி விடுகிறது. பெரும்பாலும், பேச்சு பிரச்னையை தீர்ப்பதைவிட, வளர்த்து விடுகிறது. முடிந்தால் பேசித் தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.

? பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
– பா.சின்னப்பன், சென்னை.

பதில்: இந்த கேள்விக்கு இராமாயணத்தில், அனுமன் எப்படிப் பேசினான் என்பதைச் சொல்வதன் மூலம், வால்மீகி மிக அற்புதமாகக் காட்டுகிறார். ஒரு பேச்சு அல்லது கருத்து எப்படிச் சொல்லப்பட வேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறார் அனுமன்.

பேச்சு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

1. மதுரமாக இருக்க வேண்டும்.
2. தெளிவாக இருக்க வேண்டும்.
3. சுருக்கமாக இருக்க வேண்டும்.
4. பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இதிகாசம் இன்றைய தேவையை எப்படி பூர்த்தி செய்கிறது பாருங்கள். நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களும் இதிகாசங்களும் எத்தனை நல்ல விஷயங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன என்பதை நினைத்தால் வியப்பு தான் ஏற்படுகிறது.

? மனித உணர்வில் புரிந்து கொள்ள முடியாத முரண்பாடு எது?
– தீபிகாவாசுதேவன், திருச்சி.

பதில்: இதற்குச் சரியாக பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு நண்பர் அனுப்பிய செய்தியை உதாரணமாகச் சொல்லலாம். சாலையோரம் உட்கார்ந்து இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கித் தர யோசிக்கும் நாம், அதையே ஒரு ஓவியமாக வரைந்தால், சில ஆயிரம் கொடுத்து வீட்டில் மாட்டி
வைக்கிறோம்.

? எது பயனற்றது?
– நாகராஜன், காரைக்குடி.

பதில்: ஒரு பழைய பாட்டின் கருத்தை சொல்கிறேன்.

1. கடலில் பெய்யும் மழை.
2. பகலில் எரியும் தீபம்.
3. வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு.
4. பசி இல்லாதவனுக்கு போடும் சாப்பாடு.
5. நோய் உள்ளவன் முன்னாள் வைக்கப்படும் அறுசுவை உணவு.
6. முட்டாளுக்கு சொல்லும் அறிவுரை.

இவையெல்லாம் பயன் அற்றவையே. ஆனால், இதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டிருக்கிறோம்.

? யாரை நாம் எப்போதுமே மறக்கக் கூடாது?
– முரளிதரன், நுங்கம்பாக்கம்.

பதில்: இதற்கு மகாபாரதத்தில் விதுரர் பதில் சொல்லுகிறார்.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிதுபடுத்தாதவர்கள்.
3. நம் நலத்தை நாடுபவர்கள்.
இந்த மூன்று பேரை எப்பொழுதும் மறக்கக் கூடாது என்கிறார்.

தேஜஸ்வி

The post வீடுகளுக்கு முன் பசுஞ்சாணம் கரைத்து ஏன் தெளிக்கிறோம்? appeared first on Dinakaran.

Tags : Clarity Om ,Sunilkumar, Nagai ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...