×

பொள்ளாச்சி அருகே வீடு வாடகை எடுத்து நகை திருட்டில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி கைது

ஆனைமலை : பொள்ளாச்சி அருகே வீடு வாடகை எடுத்து தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சரகத்திற்குட்பட்ட கோட்டூர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக, ஆட்கள் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்காக வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில், எஸ்ஐ நாகராஜன், சிறப்பு எஸ்ஐ ரகுநாத் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கோட்டூர், ஆனைமலை பகுதியில் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகளையும் ஆய்வு மேற்கொண்டனர். அந்த கேமராக்களில் பதிவானவற்றை ஆராய்ந்து, அதில் சந்தேகம்படும்படியாக பதிவான பொள்ளாச்சி பதிவெண் கொண்ட ஒரு பைக்கை கண்டறிந்தனர். அதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்காக கோட்டூர் மற்றும் ஆனைமலை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் நின்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோட்டூரில் வீடு வாடகை எடுத்து வசிக்கும் மதுரையை சேர்ந்த ராமச்சந்திரன் (38) என்பவரை சந்தேகத்தின்பேரில், நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் புகுந்து, நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மதுரையில் கட்டிட வேலை பார்த்து வந்த ராமச்சந்திரன், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு உள்ளன.

6 மாதத்திற்கு முன்பு பொள்ளாச்சிக்கு வந்த ராமச்சந்திரன், கோட்டூரில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலைக்கு செல்வதுபோல இருந்துள்ளார். ஆனால், ஆள் இல்லாத பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, பொள்ளாச்சி பதிவெண் கொண்ட திருட்டு பைக்கை பயன்படுத்தியுள்ளார். இப்படி கடந்த சில மாதங்களில் சுமார் 6 வீடுகளில் புகுந்து 56 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது.

இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து ராமச்சந்திரனை கைது செய்து, ரூ.28 லட்சம் மதிப்பில் 56 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். திருட பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் இரும்பு ராடு உள்ளிட்டவையும் போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ராமச்சந்திரனை, ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தனிப்படைக்கு எஸ்பி பாராட்டு

ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்த மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், வீடு புகுந்து தொடர் நகை திருட்டில் ஈடுபட்ட ராமச்சந்திரனை விரைந்து கைது செய்து, நகைகளை பறிமுதல் நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு சன்மானம் வழங்கி பாராட்டினார்.தொடர்ந்து, எஸ்பி பத்ரிநாராயணன் கூறுகையில், ‘‘வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கோட்டூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உல்லாச நகரில் 25 சிசிடிவி கேமராக்களும், சமத்தூர் மகாலட்சுமி நகரில் 20 சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனைமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை நகரை சுற்றிலும் 36 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த கேமராக்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post பொள்ளாச்சி அருகே வீடு வாடகை எடுத்து நகை திருட்டில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Anaimalai ,Kotur ,Valparai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...