×

வத்தலக்குண்டு பகுதியில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கிச் செல்லும் மாணவர்கள்

*கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டு பகுதிக்கு காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்று வருவதால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள ஆண்டிபட்டி நகர் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த நகரில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி என சுமார் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

இதில் குறிப்பாக அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டிபட்டி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் நகர் பகுதிக்கு வந்து பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன.

இதில் ஆண்டிபட்டி நகரில் இருந்து தேனி, க.விலக்கு, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில், வைகை அணை, பெரியகுளம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு நகர் பஸ்கள் சென்று வருகிறது. இந்நிலையில் நகரில் இருந்து கிராம பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதால் காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் கிடைத்த பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்ல நினைக்கின்றனர்.

குறிப்பாக ஆண்டிபட்டி – வத்தலகுண்டு சாலையில் சிலுக்குவார்பட்டி, டி.புதூர், தர்மத்துப்பட்டி, டி.அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலும் இப்பகுதியில் இருந்து ஆண்டிபட்டி நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

கம்பியை பிடித்துக் கொண்டு இரண்டு கால்களையும் வெளியே தொங்க விட்டவாறு மாணவர்கள் பயணம் மேற்கொள்வதால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்களும் சில நேரங்களில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு செல்கின்றனர். எனவே காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வத்தலக்குண்டு பகுதியில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Antipatti ,Andipatti ,Vatthalakundu ,Theni ,
× RELATED வத்தலக்குண்டுவில் காவல்நிலையம் முற்றுகை