×

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் இன்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்;

வரவு – செலவு
1. 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,28,971 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,51,514 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.

3. 2024-25 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.61,103 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.16,354 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

பெரும் சரிவை நோக்கி தமிழக பொருளாதாரம்!
4. 2023-24ஆம் ஆண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட இயலாது. அதனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

5. 2023-24இல் தமிழக அரசு சொந்த வரி வருவாய் ரூ.1,81,182 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதம் வரை 13% வருவாய் குறைந்திருக்கிறது.

6. அதேபோல், தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ.2,22,848 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1.90 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

7. தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.37,540.45 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ள நிலையில், அரசின் வருவாய் குறைந்து செலவு அதிகரித்திருப்பதால் 15% வரை உயரும்.

8. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,063.72 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை நெருங்கும் என்று தெரிகிறது.

9. 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (நிஷிஞிறி) ரூ.28.38 லட்சம் கோடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை.

10. 2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.32 லட்சம் கோடி என்ற இலக்கை எட்ட முடியாது.

11. 2023-24ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024-25ஆம் ஆண்டில் தமிழகப் பொருளாதாரம் சற்று அதிக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

மொத்த கடன் ரூ-.14.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
12. 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்க நிர்ணயித்திருந்த கடனின் அளவு ரூ.1.43 லட்சம் கோடியைவிட அதிகரிக்கும்.

13. 2024 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ-.7.26 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ-.8.34 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும்.

14. 2025 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, அரசின் நேரடிக் கடன் ரூ.9.39 லட்சம் கோடியாக இருக்கும்.

15. 2024-25ஆம் ஆண்டின் முடிவில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.5.11 லட்சம் கோடியாக இருக்கும். அரசின் மொத்தக் கடன் ரூ.14.50 லட்சம் கோடியாக இருக்கும்.

16. 2024-25 முடிவில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.52 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும்.

17. 2024-25ல் நேரடிக் கடனுக்காக ரூ.75,120 கோடி, பொதுத்துறை நிறுவன கடனுக்காக ரூ.43,435 கோடி என மொத்தம் ரூ.1,18,555 கோடி வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும்.

சிக்கன நடவடிக்கைகள்
18. 2024-25ல் அரசுத் துறைகளுக்கான நிர்வாகச் செலவுகள் 15% குறைக்கப்படும்.

19. அமைச்சர்கள் விமானப் பயணம் மேற்கொள்ள, ஆடம்பர விடுதிகளில் தங்க தடை

20. அமைச்சர்கள், அதிகாரிகள் அரசுத் துறைகளுக்கு புதிய மகிழுந்துகள் வாங்க தடை

ரூ.2 லட்சம் கோடி வரியில்லாத வருவாய் ஈட்டத் திட்டம்
21. கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரி அல்லாத வருவாய் ரூ.18,940 கோடி மட்டுமே. 2024-25ஆம் ஆண்டில் இதை ரூ.2,00,180 கோடியாக உயர்த்த சிறப்புத் திட்டம்.

22. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.40,000 கோடியும் ஈட்டப்படும்.

23. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.25,000 கோடி கிடைக்கும்.

24. ரூ.1.80 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக வருவாய் ஈட்டுவதன் மூலம், வரியல்லாத வருவாயின் அளவு ரூ.2 லட்சம் கோடி என்ற அளவை எட்டும்.

அதிக இனிப்பு, கொழுப்பு பொருட்களுக்கு 30% கூடுதல் வரி
25. குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை, பீட்சா, பர்கர், சான்ட்விச், ஷவர்மா போன்ற அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு கொண்ட பொருட்களுக்கு 30% சுகாதார வரி விதிக்கப்படும்.

26. மயோனஸ் மீது 25% தமிழ்நாடு சுகாதார வரி விதிக்கப்படும்.

27. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

2024-25 சமூக நீதி சிறப்பாண்டு
28. 2024-25ஆம் ஆண்டு சமூக நீதி சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

29. தமிழ்நாட்டில் ஜூலை 25ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும்.

30. சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில் அனைத்து சாதிகளுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

31. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெறப்பட்டு, வன்னியர் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

32. தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையிலான 35 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டின் பயன்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடப்படும்.

மதுவிலக்கு – போதை ஒழிப்பு
33. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்.

34. மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும்.

35. தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.

36. குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம்
37. சமையல் எரிவாயுக்கு ரூ.500 மானியம். இனி ரூ.418க்கு சமையல் எரிவாயு கிடைக்கும்.

38. ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.2000ஆக உயர்த்தப்படும்.

39. முதியோர் / ஆதரவற்றோர் உதவித் தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.

40. தமிழ்நாட்டில் 70 லட்சம் பேருக்கு முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூ.5,000 பரிசு
41. குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர்சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும்.

42. குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

43. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைத்தால், ரூ.1,000 வழங்கப்படும்.

44. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும்.

45. தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

46. மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்படும்.

2024-25ஆம் ஆண்டில் 2 லட்சம் பேருக்கு அரசு வேலை
47. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும். நடப்பாண்டில், 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

48. தமிழக அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் அனைவருக்கும் பணி நிலைப்பும், காலமுறை ஊதியமும் வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இடஒதுக்கீடு
49. தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.

50. தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும்.

51. தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் உள்ள வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்களின் பட்டியல், முதலில் நிலம் கொடுத்தவர்களில் முன்னுரிமை என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, அந்த வரிசையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

ஐந்தாண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள்
52. தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

53. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

டிஎன்பிஎஸ்சி: நிலையான தேர்வு அட்டவணை
54. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

55. ஜனவரி, ஜூலை மாதங்களில் தொகுதி – 4 பணிகளுக்கும், பிப்ரவரி மாதத்தில் முதல் தொகுதி பணிகளுக்கும், மார்ச் மாதத்தில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்படும்.

56. முதல் தொகுதி பணிகள் தவிர்த்து, பிற பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை

57. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:

1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000

2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000

3. 12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000

4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000

5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்
58. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, நடப்பாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.

59. அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.

60. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும்.

61. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

குடியுரிமை சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படாது
62. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தம் (சிவீtவீக்ஷ்மீஸீsலீவீஜீ (கினீமீஸீபீனீமீஸீt) கிநீt, 2019) செயல்படுத்தப்படாது.

63. தமிழ்நாட்டில் இரத்து செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, ஒரு பவுன் தங்கமும், ரூ.50 ஆயிரம் வரை பணமும் வழங்கப்படும்.

64. தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு மாற்றாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும்
65. கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக வேறு பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்ட பின், அது பூங்காவாக மாற்றப்படும்.

66. கோயம்பேட்டில் அமைக்கப்படும் பூங்கா 66.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அது அமையும்.

கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை
67. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். அதற்கான பணிகள் நடப்பாண்டில் தொடங்கும்.

68. சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். போரூர் – பூந்தமல்லி இடையே அடுத்தாண்டு போக்குவரத்துத் தொடங்கும்.

69. கோயம்புத்தூரில் 144 கி.மீ.க்கு ரூ.9,424 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது
70. தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களை நிர்வாக சீர்திருத்தத்தின் மூலமாக இலாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

71. தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.

பறக்கும் சாலை திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு
72. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பறக்கும் சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மாநில ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

73. தாம்பரம் – செங்கல்பட்டு ஆறுவழி உயர்மட்ட சாலை, மதுரவாயல் – திருப்பெரும்புதூர் உயர்மட்ட சாலை, மாதவரம் சந்திப்பு – வெளிவட்டச் சாலை, திருச்சி – துவாக்குடி உயர்மட்ட சாலை ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு.

74. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் மாற்றவும், மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

75. பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்
76. அளவுக்கு அதிகமான மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில், மின் கட்டணம் குறைக்கப்படும்.

77. இரு மாதங்களுக்கு ஒருமுறைக்கு பதிலாக, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும்.

78. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின் திட்டம் செயல்படுத்தப்படும்.

79. காற்றாலை, சூரியஒளி மின் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

பள்ளிக்கல்விக்கு ரூ.1.25 லட்சம் கோடி: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.32,000 கோடி
80. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

81. மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் மொத்தம் 1000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கும்.

82. பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

83. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

மாநில கல்விக் கொள்கை
84. தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கை நடப்பாண்டில் வெளியிடப்படும்.

85. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

உயர்கல்வி
86. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

87. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

88. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.

மருத்துவத்துறைக்கு ரூ.48,000 கோடி
89. 2024-25ஆம் ஆண்டில் மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 1.5%ஆக, அதாவது ரூ.48,000 கோடியாக உயர்த்தப்படும்.

90. மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

91. பொதுமக்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும்.

92. அவசர ஊர்திகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 1,353-லிருந்து 2,000ஆக உயர்த்தப்படும்.

93. மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

94. புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடு
95. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.

96. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.

97. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம்
98. தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

99. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60ஆக உயர்த்தப்படும்.

100. நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காக நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய உயர்கல்வி நிறுவனங்கள்
101. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:

1. அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.

2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம் – இணைப்பு என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.

3.சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

4. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படும்.

வலிமையான லோக்அயுக்தா
102. தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.

103. முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

பொதுச் சேவை உரிமைச் சட்டம்
104. தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

சட்டம் – ஒழுங்கு
105. சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.

106. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

மேகதாது அணை தடுக்கப்படும்
107. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் பணிகள் தடுக்கப்படும்.

108. மேகதாது அணை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு மத்திய நீர்வள ஆணையத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

109. முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும். பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும்.

110. அடுத்த ஓராண்டில் அணையின் நீர்மட்டம் 152ஆக உயர்த்தப்படும்.

வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி
111. 2024-25ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

112. பாட்டாளி மக்கள் கட்சியின் பதினேழாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.80,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.60,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.

113. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

114. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி செலவிடப்படும்.

115. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும்.

பாசன திட்டங்களை செயல்படுத்த தனி ஆணையம்
116. தமிழ்நாட்டில் பாசனப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் நீர்ப்பாசனத் திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்துவதற்காக 2024-25ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திட்ட சிறப்பாண்டாக அறிவிக்கப்படுகிறது.

117. நீர்ப்பாசனத் திட்டங்களை புத்தெழுச்சியுடன் செயல்படுத்த தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

118. நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களும் 10 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

சாகுபடி பரப்பு 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்
119. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.

120. தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் 15,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்துவிட்டது. காணாமல்போன ஏரிகளில் சாத்தியமானவற்றை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.

அரிசி விலையைக் கட்டுப்படுத்த கிலோவுக்கு ரூ.15 மானியம்
121. தமிழ்நாட்டில் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உயர்வகை அரிசி, இரண்டாம் தரவகை பொன்னி அரிசி ஆகியவற்றை முறையே கிலோ ரூ.50, ரூ.45 என்ற விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

122. இந்த இருவகை அரிசிகளுக்கும் கிலோவுக்கு ரூ.15 வீதம் தமிழகஅரசு மானியம் வழங்கும்.

123. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,800 விலை கிடைக்கும்.

124. 2024-25 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,000ஆக நிர்ணயிக்கப்படும்.

125. அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்கும்.

வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாடு
126. வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகியவற்றில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க முதலீடு திரட்டும் நோக்குடன், வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாடு 06.04.2025ஆம் தேதி தஞ்சாவூரில் நடத்தப்படும்.

127. வேளாண்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி திரட்டப்படும்.

128. வேளாண் துறையில் 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.

129. சிறப்பாக செயல்படும் வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம்.

130. மிகச் சிறப்பாக செயல்படும் 250 புத்தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் அரசின் சார்பில் ரூ.1 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

மாவட்டத் தலைநகரங்களில் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சிகள்
131. வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சந்தை வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்களுக்கு விளக்கும் வகையில், ஆண்டுதோறும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சிகள் 3 நாட்களுக்கு நடத்தப்படும்.

132. காவிரி – தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.

133. தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்டம், அத்திக்கடவு – அவிநாசித் திட்டம், கொள்ளிடம் தடுப்பணைத் திட்டம் ஆகிய முப்பெரும் திட்டங்களுக்கு ஜூலையில் திறப்புவிழா நடத்தப்படும்.

134. மதுராந்தகம் ஏரியை ரூ.120 கோடியில் தூர்வாரி சீரமைக்கும் திட்டம் ஜூலையில் நிறைவடையும்.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் திரும்பப்பெறப்படும்
135. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டமசோதா திரும்பப்பெறப்படும்.

136. திருவள்ளூர் வட்டத்தில் 1,703 ஏக்கர் பரப்பில் அறிவு நகரம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்.

137. கிழக்குக் கடற்கரை சாலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கப்படும்.

138. கோவளம் பகுதியில் செயல்படுத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இரத்து செய்யப்படும்.

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
9 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: என்எல்சி சுரங்கங்களுக்குத் தடை

139. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும்.

140. என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது.

141. 66,000 ஏக்கர் பரப்பளவில் வீராணம் – பாளையங்கோட்டை சுரங்கத் திட்டம், சேத்தியாத்தோப்பு சுரங்கத் திட்டம் ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்.

142. அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் ஆலைகள் அமைக்க தடை விதிக்கப்படும்.

143. செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.

144. சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்திற்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது.

காலநிலை செயல்திட்டம்
145. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக நகரங்களுக்கான காலநிலை செயல்திட்டம் உடனடியாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.

பல்வேறு தரப்பினர் நலன்
146. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடாக கிரிமிலேயருக்கான வருவாய் வரம்பை தற்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

147. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படும்.

148. பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்துவதற்கான சட்டமுன்வரைவை விரைவாக நிறைவேற்றும்படி, மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்ளும்.

149. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.

150. 2024-25ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 120 தலைப்புகளில் 463 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தமிழக அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். என அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

The post பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Proletarian People's Party ,Anbumani Ramadoss ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...