×

மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தின் இணைப்பு பகுதியில் விரிசல்

*விபத்து ஏற்படும் முன் தடுக்க வேண்டுகோள்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்களில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் என்பதால் வாகனம் ஓட்டுநர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மதுரையில் இருந்துராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நான்கு சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி, போகலூர் ஆகிய இரு இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து திருப்புவனம் வரையிலான சாலையில் புளியங்குளம், மணலூர், திருப்புவனம், லாடனேந்தல், உள்ளிட்ட இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்பாலங்கள் கட்டப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த மேம்பாலங்களை நான்கு வழிச்சாலை மேம்பாட்டு ஆணையத்தில் பராமரிப்பு பணிகளை பார்ப்பதாக டெண்டர் எடுத்த நிறுவனங்கள் பராமரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேம்பாலங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் நூறு மீட்டரிலிருந்து ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தூண்களுக்கு இடையே உள்ள இணைப்புகள் பராமரிப்பின்றி மேம்பாலங்களில் பல்வேறு இடங்களில் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டும், சிமெண்ட் கட்டுமானம் பெயர்ந்து விழுந்து இடைவெளி ஏற்படுள்ளது.

இணைப்பு பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் பலத்த அதிர்வு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த சேதம் குறித்து சுங்கச்சாவடியில் புகார் தெரிவித்தாலும் கண்டு கொள்ளப்படவில்லை என வாகன ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அனைத்து மேம்பாலங்களின் ஸ்திரத்தன்மை குறித்து நான்கு வழிச்சாலை தேசிய ஆணைய அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தின் இணைப்பு பகுதியில் விரிசல் appeared first on Dinakaran.

Tags : Madurai-Ramanathapuram ,-lane highway ,Tiruppuvanam ,lane highway ,Madurai-Ramanathapuram four-lane highway ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை