×

சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று 2 முக்கிய தீர்மானங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர உள்ளார். மு.க. ஸ்டாலின், முதலமைச்சர், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:- 2026ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால்,

1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.

“ஒரு நாடு ஒரு தேர்தல்’ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது. ஆகிய 2 தீர்மானங்களை இன்று முதல்வர் கொண்டு வருகிறார்.

 

The post சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,K. Stalin ,M. K. Stalin ,Chief Minister ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...