×

சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதித்த பழங்குடியின இளம்பெண் * முதல் முயற்சியிலேயே இலக்கை அடைந்தார் * குழந்தை பிறந்த 3வது நாளில் தேர்வு எழுதினார் ஜவ்வாதுமலையை சேர்ந்த பட்டதாரி

திருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த பழங்குடியின பட்டதாரி இளம்பெண், உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் நீதிபதி எனும் சிறப்பை பெற்றுள்ள இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதி புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பதி(23). சென்னை சட்டக்கல்லூரியில் பி.ஏ., பி.எல் பட்டம் பெற்றுள்ளார். இவரது கணவர் வெங்கட்ராமன். 108 ஆம்புலன்ஸ் டிரைவாக பணிபுரிகிறார். மலைவாழ் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு, 4 மாத ஆண் குழந்தை உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி பதவியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நடத்தியது. அதன்படி, முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், முதன்மைத் தேர்வு நவம்பர் மாதமும் நடந்தது.

முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் புலியூர் கிராமத்தை சேர்ந்த பதி தேர்ச்சி பெற்றார். அதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 29ம் தேதி நேர்முகத் தேர்வு நடந்தது. அந்த தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதிலும், பதி தேர்ச்சி பெற்று தற்போது உரிமையியல் நீதிபதி பணியிடத்துக்கு தேர்வாகியிருக்கிறார். அடிப்படை வசதிகள் குறைவான, மழைவாழ் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின இளம்பெண் பட்டதாரியான பதி, உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மேலும், சமூக நீதி என்ற சொல்லை உச்சரிக்கக்கூட மனம் இல்லாமல் வளையவரும் சிலருக்கு பதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியோடு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியிருக்கும் பதி, இத்தேர்வின் வெற்றிக்காக கடந்து வந்த பாதையும், சவால்களும் மிகவும் வியப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. பதியின் சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் எனும் மலை கிராமமாகும். இவரது தந்தை காளி, தாய் மல்லிகா. இருவரும் கூலித்தொழிலாளிகள். சொந்த கிராமத்தில் வாழ்வாதாரம் இழந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள பாட்டி வீட்டிற்கு பெற்றோருடன் குடிபெயர்ந்துள்ளார் பதி. அங்கேயே பள்ளிக்கல்வியை முடித்து, பின்னர் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்துள்ளார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து படிக்க வைத்துள்ளனர்.
கல்லூரியில் கிடைத்த வழிகாட்டுதலின்படி, ஆரம்பத்தில் இருந்தே நீதிபதி தேர்வுக்கான போட்டித் தேர்வுக்கும் தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். திருமணமான பிறகும், தனது இலக்கை அடைவதில் உறுதியாக இருந்துள்ளார் பதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது முதல்நிலை தேர்வு நடந்துள்ளது. ஆனாலும், நம்பிக்கையுடன் அதில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3வது நாள், முதன்மைத் தேர்வு சென்னையில் நடந்தது. மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் ஆபத்தான நிலையில் தேர்வுக்கு சென்னை வரை பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், தேர்வுக்கு முழுமையாக தயாராகியிருப்பதால், நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதியுடன் தெரிவித்த பதி, கணவரின் துணையுடன் பச்சிளம் குழந்தையுடன் காரில் பயணம் செய்து, சென்னையில் முதன்மைத் தேர்வை எழுதினார். அதிலும், வெற்றி பெற்றுள்ளார். தான் எதிர்கொண்ட முதல் போட்டித் தேர்விலேயே வெற்றியை பெற்று, தமிழ்நாட்டின் பழங்குடியின முதல் பெண் சிவில் நீதிபதியாக பதி தேர்வாகியிருப்பது, ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு உற்சாகத்தையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கல்வி என்ன செய்யும் என்பதற்கு சாட்சியாக உயர்ந்து நிற்கும் பதிக்கு மழைவாழ் மக்களின் பாராட்டும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. ஜவ்வாதுமலை புலியூர் கிராமம் உற்சாகத்தில் நிறைந்திருக்கிறது.

The post சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதித்த பழங்குடியின இளம்பெண் * முதல் முயற்சியிலேயே இலக்கை அடைந்தார் * குழந்தை பிறந்த 3வது நாளில் தேர்வு எழுதினார் ஜவ்வாதுமலையை சேர்ந்த பட்டதாரி appeared first on Dinakaran.

Tags : Javwadumalai ,Thiruvannamalai ,Javvadumalai ,Tiruvannamalai ,Tamil Nadu ,Javvathumalai ,
× RELATED கோடை கால இயற்கை சுற்றுலா * 100 மாணவ –...