×

சிவில் கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்: குழந்தை பெற்ற மறுநாளில் தேர்வு எழுதி ஸ்ரீபதி சாதனை; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி (23). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ படித்து தொடர்ந்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு திருமணம் ஆனது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதிக்கு பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக குழந்தை பிறந்த பெண்கள் ஒரு வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் நீதிபதி ஆக வேண்டும் என்ற லட்சியத்தில், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். மேலும் ஸ்ரீபதியின் கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2வது நாளில் காரில் சென்னைக்கு பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார். தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி. இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: முதல் பழங்குடியின சிவில் நீதிபதியாக தேர்வான ஸ்ரீபதிக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி, 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன்னேறவேண்டும்வைய மேலே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்வழி கல்வி கற்று, அயராத உழைப்பினாலும் – கடும் முயற்சியாலும் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை – புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பெண்ணான சகோதரி ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

The post சிவில் கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்: குழந்தை பெற்ற மறுநாளில் தேர்வு எழுதி ஸ்ரீபதி சாதனை; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sripati Sadiya ,Mu. K. ,Stalin ,Chennai ,Sripati ,Puliur hill ,Jawwadu hill, Tiruvannamalai district ,Mount Elgiri ,B. L ,M. K. Stalin ,
× RELATED அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்...