×

அரசு உத்தரவிட்டால் உடனே நிறைவேற்ற வேண்டியதில்லை: துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை; போராடிய ஆசிரியர்களுடன் வாக்குவாதம்

சேலம் பெரியார் பல்கலைக் கழக ஆட்சி பேரவை குழு கூட்டம், கூட்ட அரங்கில் துணை வேந்தர் ஜெகநாதன் தலைமையில் நேற்று காலை தொடங்கியது. கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பலரும் கூட்டத்தில் பேசும் போது, பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்திட தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து 4 நாள் ஆகியும் இதுவரை அவரை பணியிடை நீக்கம் செய்யாமல், அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தேர்தலை அவசர அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும், பொருளே இல்லாமல் ஆட்சி பேரவை குழு கூட்டம் நடத்துவதற்கும் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடாமல் இருப்பதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு துணை வேந்தர் ஜெகநாதன் ஆரம்பத்தில் பதில் அளிக்க மறுத்தார். ஆசிரியர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பின்னர், ‘அரசு உத்தரவு தொடர்பாக நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அரசு உத்தரவிட்டால் உடனே செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான கால அவகாசம் உள்ளது. அப்பிரச்னை எனது ஆய்வில் உள்ளது. வரும் 29ம் தேதி வரை நேரம் உள்ளது’ என்று தெரிவித்தார்.

‘தேர்தல் தொடர்பாக மைனாரிட்டியாக உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றும் துணைவேந்தர் கூறினார்.துணைவேந்தரின் இந்த பேச்சைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் ஆகிய இரு சங்கங்களை சேர்ந்த ஆட்சிப்பேரவை குழு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டு, துணைவேந்தரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது துணைவேந்தருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளர்கள் அங்கு சென்றபோது துணைவேந்தர் ஜெகநாதன் செய்தியாளர்களை கூட்ட அரங்கை விட்டு வெளியே தள்ளி கதவை மூடினார்.

ஆசிரியர்களின் தொடர்பு போராட்டத்தைத் தொடர்ந்து, பேரவை கூட்டத்தை மாலை 4 மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு துணைவேந்தர் சென்றார். அதே நேரம் தேர்தலை நடத்திடவும் உத்தரவிட்டார். துணைவேந்தரின் இந்த உத்தரவை கண்டித்து தேர்தல் நடைபெறும் அறை முன்பு கூடி அரசு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சி பேரவை குழு கூட்டம் மாலையில் நடந்தது. இதில் 100 ஆசிரியர்கள் பங்கேற்றனர். காலையில் போராட்டம் நடத்திய ஆசிரியர் சங்கத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.

The post அரசு உத்தரவிட்டால் உடனே நிறைவேற்ற வேண்டியதில்லை: துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை; போராடிய ஆசிரியர்களுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University Board of Regents Committee ,Vice ,Chancellor ,Jagannathan ,Periyar University ,Dinakaran ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு