×

ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்: போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த பணியாளர்கள் சங்கங்கள் கொண்ட அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மீண்டும் நாளை தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து, அந்த அமைப்பினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நேற்று பேச்சு நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள 26 சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசின் சார்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, அதிகாரிகள் பங்கேற்றனர். படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்தனர். அப்போது, அரசாணை 243ஐ ரத்து செய்வது, இஎல் சரண்டர் நிலுவைத்தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முதற்கட்டமாக நிறைவேற்றித் தர ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தினர். முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். அதனால், முதல்வர் முடிவு அறிவிக்கும் வரையில் போராட்டத்தை தொடராமல் காத்திருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து நேற்றைய பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைளில் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டார். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் குறைந்த பட்சம் 50,000 பேர்கள் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணி நியமனம் பெறுவார்கள். இவ்வாறு பல்வேறு வகைகளிலும் அரசு அலுவலர்களின் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும். எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

The post ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்: போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும்; தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jacto-Jio ,Tamil Nadu Government ,CHENNAI ,JACTO-JEO ,Tamil Nadu… ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...