×

தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க தொடர் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பேரணி நேற்று நடைபெற்றது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் முதல் தீவு திடல் வரை இந்த பேரணி நடைபெற்றது. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் நின்றிருந்த பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்தான பிரசுரங்களை வழங்கியது மட்டுமில்லாமல் மஞ்சப்பைகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்த பேரணியில் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம், சாலை பாதுகாப்பு காவல் துறை துணை தலைவர் மல்லிகா, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

பேரணியை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: இந்தியாவில் நடக்கக்கூடிய சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது. சாலை விபத்துகளில் 19 வயதிலிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் ஓட்டுநர்களின் கவனக்குறைவு தான் சாலை விபத்துகளுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று சில ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் களைவதற்காகவே இந்த சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விபத்துக்கள் குறைந்து இருந்தாலும் முற்றிலும் குறைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக முதல்வர் இன்னுயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்துள்ளார் இத்திட்டத்தால் உயிர் இழப்புகள் குறைந்துள்ளது. பின்னிருக்கைகளில் ஹெல்மெட் அணியாதவர்கள் குறித்து காவல்துறை தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க தொடர் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Tamil Nadu government ,Chepakkam, Chennai ,National Road Safety Month ,Sivasankar ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...