×

திமுக தலைமைக் கழக துணை மேலாளர் அறிவாலயம் ஜெயக்குமார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: திமுக தலைமைக் கழக துணை மேலாளர் அறிவாலயம் ஜெயக்குமார் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் துணை மேலாளர் அறிவாலயம் ஜெயக்குமார், சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.45 மணியளவில் அவர் இறந்தார். சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட ஜெயக்குமார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக தொடங்கப்பட்ட போது சென்னை ராயபுரத்தில் உள்ள அறிவகத்தில் 1970 முதல் பணியை தொடங்கிய ஜெயக்குமார், அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அன்பகம், அண்ணா அறிவாலயம் ஆகிய அலுவலகங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயக்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி:

தலைமைக் கழகத்தின் தூணாக விளங்கிய ஜெயக்குமார் மறைந்த செய்தி என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது. அண்ணா அறிவாலயத்தின் மேலாளரான பத்மநாபனும் ஜெயக்குமாரும் இரட்டைத் தூண்களெனத் தலைமைக் கழகப் பணிகளைத் தாங்கி வந்தனர். தலைமைக் கழகத்தால் எடுக்கப்படும் முடிவுகளைப் பிழைதிருத்தம் செய்து அவற்றை வெளியிட்டதில் அவர்கள் இருவரது பங்கும் அளப்பரியது. அதில் ஒரு தூண் இன்று சரிந்துவிட்டது என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பாசத்துடன் பழகிய ஜெயக்குமார் திருமணத்தை நடத்தி வைத்தேன், அவரது குழந்தைகளுக்குப் பெயரிட்டேன், அவரது குடும்பத்தினரின் திருமணங்களை நடத்தி வைத்தேன், உடன்பிறப்பாய் துணை நின்ற அறிவாலயம் ஜெயக்குமாரை வழியனுப்பும் துயர நிலைக்கு இன்று ஆளாகிவிட்ட கொடுமையும் வந்து சேர்ந்துவிட்டது. அறிவாலயம் ஜெயக்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post திமுக தலைமைக் கழக துணை மேலாளர் அறிவாலயம் ஜெயக்குமார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Executive Deputy Manager ,Vidhalayam Jayakumar ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,Head Office ,Deputy Manager ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி