×

பைக் மீது லாரி மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி

புழல்: பெரியபாளையம் அடுத்த மஞ்சம்காரனை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை குப்பம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோக் குமார் (25). இவர் வண்டி காவனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் இவரது நண்பருமான அதே பகுதியைச் சேர்ந்த பரத் (25) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு காரனோடை அடுத்த ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை பெரியபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அசோக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதில் படுகாயம் அடைந்த பரத் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை முடிந்து அசோக்குமாரின் சடலத்தை அவரது வீட்டுக்கு கொண்டு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொண்டு, காரனோடை அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை மேம்பாலத்தில் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மதியம் 1 மணி முதல் 3 மணி வரை இந்த மறியல் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி பதிவு எண் கண்டுபிடிக்கப்பட்டது. விரைவில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு, லாரியும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் ஜனப்பசத்திரம் கூட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பைக் மீது லாரி மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Ashok Kumar ,Perumal Kovil Street ,Kotta Kuppam ,Manjamkaranai Panchayat ,Periyapalayam ,Vandi Kavanur ,
× RELATED பாஸ்போர்ட் இல்லாததால் கள்ளத்தனமாக...