×

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது: கமிஷனர் வேண்டுகோள்

சென்னை: கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம், பரமக்குடி, இலந்தை குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (47). இவர் சென்னையில் உள்ள தனியார் ஏஜென்சி நடத்தி வரும் நபர், கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக தினசரி செய்தி தாளில் அளித்த விளம்பரத்தை பார்த்து, தனது மகனுக்கு வேலை வாங்குவதற்காக தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, அவர்கள் அளித்த பொய்யான வார்த்தைகளை நம்பி, வங்கி கணக்கு மூலமாகவும், ரொக்கமாகவும் மொத்தம் ₹14.25 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டதாக, சென்னை கமிஷனரிடம் அளித்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

மேலும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை, ஈக்காட்டுதாங்கல், காந்திநகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவராஜ் (33) என்பவர் ஏஜென்சி ஒன்றின் பெயரில் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2022ம் ஆண்டு முதல் இதுவரை 23 பேரிடம் ₹1 கோடி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவரை போலீசார் கடந்த 12ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் யாரும், இதுபோன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது: கமிஷனர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Canada ,Shanmugam ,Ilandai Kulam ,Paramakkudy ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED கனடா போட்டியில் வரலாறு படைத்த செஸ்...