×

ஐக்கிய அரபு அமீரகத்திலும் யுபிஐ வசதி : அபுதாபியில் இந்து கோயிலை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

அபுதாபி: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அபுதாபி விமான நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அபுதாபியில் உள்ள டெல்லி ஐஐடி வளாகத்தில் இந்திய மாணவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அதிபர் ஷேக் முகமது சயீத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தலைவர்கள் முன்னிலையில் வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பின்டெக், எரிசக்தி, உள்கட்டமைப்பு, கலாச்சாரம் உறவு உள்ளிட்ட துறைகளில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (பிஐடி) இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு, உடனடி பண பரிவர்த்தனை சேவைகளான இந்தியாவின் யுபிஐ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆனி மற்றும் உள்நாட்டு டெபிட், கிரெடிட் கார்டுகளை இணைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்தியாவின் ரூபே கார்டை பிரதமர் மோடியும், அதிபர் சயீத்தும் இணைந்து அபுதாபியில் தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த ‘அஹ்லான் மோடி’ (ஹலோ மோடி என்பதன் அரேபிய மொழியாக்கம்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சயீத் விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 60,000 இந்தியர்கள் குவிந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு நீடூழி வாழ்க. நீங்கள் இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் உங்கள் இதயங்கள் ஒன்றிணைந்துள்ளன. இங்கு நான் எனது குடும்பத்தினரை சந்திக்கும் உணர்வைப் பெறுகிறேன். அபுதாபியில் கோயில் கட்டுவது இந்தியா, யுஏஇ இடையேயான நட்பின் புதிய அத்தியாயம். சமீபத்தில் நாடு சென்றவர்கள் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைவதை காணலாம். 2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது ஒவ்வொரு இந்தியரின் தீர்மானம். இந்தியாவின் திறனை நான் நம்புகிறேன். எனது 3வது முறை ஆட்சியில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். இது மோடியின் உத்தரவாதம். விரைவில் இங்கும் யுபிஐ பண பரிவர்த்தனை வசதி கொண்டு வரப்படும். நீங்கள் யுபிஐ மூலமாகவே இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு மொபைலிலேயே பணம் அனுப்பலாம்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

The post ஐக்கிய அரபு அமீரகத்திலும் யுபிஐ வசதி : அபுதாபியில் இந்து கோயிலை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : UPI ,UAE ,PM ,Abu Dhabi ,Modi ,United Arab Emirates ,President ,Sheikh Mohammed bin Saeed Al Nahyan ,Abu Dhabi airport ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...