×

ரச்சின் ரவிந்திரா சுழலில் தென் ஆப்ரிக்கா திணறல்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்துள்ளது. செடான் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா கேப்டன் நீல் பிரேண்ட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். பிரேண்ட், கிளைட் பார்ச்சூன் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். கிளைட் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, பிரேண்ட் 25, ரேனர்ட் வான் டோண்டர் 32, ஜுபேர் ஹம்சா 20, கீகன் பீட்டர்சன் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்ரிக்கா 47.1 ஓவரில் 101 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டேவிட் பெடிங்ஹாம் – ருவன் டி ஸ்வார்ட் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. பெடிங்ஹாம் 39 ரன் (102 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ரச்சின் சுழலில் யங் வசம் பிடிபட்டார். அடுத்து டி ஸ்வார்ட்டுடன் இணைந்த அறிமுக வீரர் ஷான் வோன் பெர்க் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தென் ஆப்ரிக்கா ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்துள்ளது (89 ஓவர்). டி ஸ்வார்ட் 55 ரன், வோன் பெர்க் 34 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்துவீச்சில் ரச்சின் 21 ஓவரில் 8 மெய்டன் உள்பட 33 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஹென்றி, புதுமுகம் வில்லியம் ஓரூர்கி, நீல் வேக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ரச்சின் ரவிந்திரா சுழலில் தென் ஆப்ரிக்கா திணறல் appeared first on Dinakaran.

Tags : South Africa ,Rachin Ravindra ,Hamilton ,New Zealand ,Sedan Park ,Neil Brent ,
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...