×

வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி: ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்

பெர்த்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 37 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 8.4 ஓவரில் 79 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஜான்சன் சார்லஸ் 4, நிகோலஸ் பூரன் 1, கைல் மேயர்ஸ் 11, ரோஸ்டன் சேஸ் 37, கேப்டன் பாவெல் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், ஷெர்பேன் ரூதர்போர்டு – ஆந்த்ரே ரஸ்ஸல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 139 ரன் சேர்த்து சாதனை படைத்தது.

ரூதர்போர்டு 33 பந்திலும், ரஸ்ஸல் 25 பந்திலும் அரை சதம் அடித்து அசத்தினர். ஆடம் ஸம்பா வீசிய 19வது ஓவரில் ரஸ்ஸல் 4 சிக்சர், 1 பவுண்டரி விளாசியது குறிப்பிடத்தக்கது. ரஸ்ஸல் 71 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார். வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது. ரூதர்போர்டு 67 ரன் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), ரொமாரியோ 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஜேவியர் பார்ட்லெட் 2, பெஹரண்டார்ப், ஸ்பென்சர், ஹார்டி, ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் மட்டுமே எடுத்து, 37 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வார்னர் 81 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, கேப்டன் மார்ஷ் 17, ஹார்டி 16, இங்லிஸ் 1, மேக்ஸ்வெல் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டிம் டேவிட் 41 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), மேத்யூ வேடு 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ, சேஸ் தலா 2, அகீல் உசேன் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ரஸ்ஸல் ஆட்ட நாயகன் விருதும், வார்னர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி: ரஸ்ஸல் அதிரடி ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : West Indies' ,Russell ,Perth ,West Indies ,T20I ,Australia ,Perth Stadium ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...