×

கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு வழக்கு மாஜி முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் சம்மன்: ஹேமந்த், கெஜ்ரிவாலை தொடர்ந்து ‘ஈடி’ நடவடிக்கை

காஷ்மீர்: கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு வழக்கில் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசியமாநாட்டு கட்சி மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா (86), ஜம்மு – காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். கடந்த 2001ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுக்கு இடையில், ஜம்மு – காஷ்மீரில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.112 கோடி வழங்கியது, இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக விசாரணை நடத்த, பரூக் அப்துல்லாவிற்கு கடந்த 11ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி பரூக் அப்துல்லா ஆஜராகவில்லை. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே பணமோசடி வழக்கில் சிக்கிய ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அதேபோல் பணமோசடி வழக்கில் சிக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால் அவர் இன்னும் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை. தற்போது ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதால், முன்னாள், இந்நாள் முதல்வர்கள் குறிவைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

The post கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு வழக்கு மாஜி முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் சம்மன்: ஹேமந்த், கெஜ்ரிவாலை தொடர்ந்து ‘ஈடி’ நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,Farooq Abdullah ,Cricket Association ,ED ,Hemant ,Kejriwal ,Kashmir ,Hemant Soran ,Jammu and Kashmir ,senior ,National Conference ,Farooq ,Cricket ,Hemant, ,Dinakaran ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...