×

சேலத்தை கலக்கிய செட்டிநாட்டு சமையல் விழா!

நன்றி குங்குமம் தோழி

“அங்க வெள்ளைப் பணியாரம் இருக்கு. நேற்று சீக்கிரமாவே தீர்ந்திடுச்சு. சீக்கிரம் வாங்க. இன்னிக்காவது வாங்கி சாப்பிடலாம்” என்று ஒரு பெண்கள் கூட்டம் குழிப்பணியாரம் பக்கம் நகர்ந்து சென்றனர். மறுபக்கம், “அம்மா எனக்கு அந்த குஃபி ஐஸ்தான் வேண்டும்” என்று அடம் பிடித்த குழந்தையை சமாதானம் செய்த அம்மாவிடம் ‘‘வாங்கிக் கொடுங்க… அது சிறுதானியத்துல செஞ்ச ஐஸ்தான்” என்றனர் குல்ஃபி ஐஸ் கவுன்டரில்.

‘‘சார்… சிக்கன் லாலிபாப்பும் பிரியாணியும் வெளியில இருக்கற ஸ்டால்ல செய்யறாங்க. டேஸ்ட் சூப்பரா இருக்காம்… வாங்க சாப்பிடலாம்”… இப்படி எச்சில் ஊறவைக்கும் உரையாடல்கள் சேலத்தில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள செட்டிநாடு மகாலில் கடந்த மாதம் செட்டிநாடுசமையல் திருவிழா நடைபெற்றது. செவிகளில் உணவின் சுவையை உணர்ந்தாலும், அதனை சுவைத்துப் பார்க்கவும், அங்கு உள்ள சிறப்பு உணவுகள் குறித்தும் தெரிந்துகொள்ள ஒரு ரவுண்ட் அடித்தோம்.

பொதுவாகவே செட்டிநாட்டு சமையலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவற்றின் ருசியும், சத்துக்களும் அனைவரையும் மயக்கும். காரமாக இருந்தாலும் இனிப்பாக இருந்தாலும் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் தனி சுவைதான். ‘‘செட்டிநாடு சந்தை 2024” என்ற பெயரில் சேலம் நகரின் பிரபல நிறுவனங்கள் அங்கு அணிவகுத்து இருந்தாலும் மக்களை அங்கு வரவைத்தது ஆச்சிகளின் உணவுகள்தான்.

சேலம் நகரத்தார் சங்கத்தினருடன் இணைந்து நகரத்தார் மகளிர் மன்றத்தினர் சமைத்து விற்பனையான செட்டிநாடு உணவுகள்தான் அன்று திருவிழாவின் ஹைலைட். மகளிர்கள் அனைவரும் மஞ்சள் வண்ண புடவைகளில் அங்குமிங்கும் சுறுசுறுப்பாக இயங்கி உணவு வகைகளை உபசரிப்புடனும் அக்கறையுடனும் தந்த காட்சி உண்மையாக இது கண்காட்சியா அல்லது வீடா என எண்ண வைத்தது. இரண்டு பெண்கள் இருந்தாலே இணைந்து இயங்க முடியாது என்ற நிலை இருக்க இங்கு மகளிர்களின் ராஜ்ஜியமே ஒற்றுமையாக நடந்து கொண்டிருந்தது. வருபவர்களை என்ன வேண்டும் என்று கேட்டு அழைத்துச் செல்வதில் மும்முரமாக இருந்தார் விழாவின் தலைவியான வள்ளி நாயகி.

திருவிழாவில் முக்கிய ஹைலைட்டே சிறுதானிய ஐஸ் தயாரிப்பாளர் லலிதா அவர்களின் குல்ஃபி ஐஸ்தான். ‘‘எங்க சங்கம் எப்ப உணவுத் திருவிழா நடத்தினாலும் தவறாம வந்து ஸ்டால் போடுவோம். இந்த தடவை புதுமையாக என்ன பண்ணலாம்னு யோசிச்சு செய்ததுதான் இந்த சிறுதானிய ஐஸ். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. என்னைப் போன்ற பல தொழில் முனைவோர்களுக்கு இவங்க தர ஆதரவுக்கு உண்மையில் நன்றி சொல்லணும்” என்றார்.

அடுத்து உணவுகள் தயாரிக்கும் இடத்திற்கு சென்றால், அங்கு ஒரு உறுப்பினர் கந்தரப்பத்தை வட்ட வட்டமாக கொதிக்கும் எண்ணெயில் ஊற்றிக் கொண்டிருந்தார். மறுபுறம் மற்ெறாருவர், பளீரென்ற மாவில் முறுக்குகளை பிழிந்து எண்ணெயில் போட்டு எடுத்தபடி இருக்க அந்த முறுக்குகளுக்காக வெளியில் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. அதன் பெயர் பச்சமுறுக்கு என்றார்கள். எண்ணெயில் போட்டதும் எடுத்து அதில் பொடி தூவி தந்தார்கள். மிகவும் மென்மையாக சுவையாக இருந்தது. இதே போல ஆடிக் கூழ்.உளுத்தம் பருப்பை வறுத்து வெல்லம், நெய் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பு மணம் நாவில் எச்சில் ஊற வைத்தது. வெறும் பச்சரிசியை இடித்து மாவாக்கி செய்த வெள்ளைப் பணியாரம் காரச் சட்னியுடன் சுவை அள்ளியது.

பால் பணியாரம், கவுனி அரிசி அல்வா, ஃபிங்கர் ஃபிரை, ஜிகிர்தண்டா, கட்லெட் என எங்கு செல்வது… எதை வாங்குவது என்ற உணவு உற்சாகம் அங்கு இருந்தவர்களிடையே மிதந்தது. இடையில் சமையலுக்குத் தேவையானவற்றை அங்குமிங்கும் சென்று கேட்டு ஸ்டோர் அறைக்குச் சென்று செக் செய்த வண்ணம் நம்மைக் கவர்ந்தார் மற்றொரு உறுப்பினர்.

எதற்காக இவ்வளவு மெனக் கெடலுடன் உணவு விற்பனை என்ற கேள்விக்கு விடையளித்தார் தலைவி வள்ளி நாயகி. ‘‘எங்கள் நகரத்தார் மகளிர் சங்கம் துவங்கி 28 வருஷம் ஆச்சு. முதன் முதலில் சேலத்தில்தான் மகளிருக்காக சங்கம் ஆரம்பித்தோம். இரண்டு வருஷத்துக்கு ஒருவர் தலைவியா இருப்போம். இந்த வருடம் நான் தலைவி பொறுப்பை ஏற்று இருக்கிறேன். என் கணவர் சேலம் நகரத்தார் சங்கத் தலைவராகவும் நான் மகளிர் சங்கத் தலைவியாகவும் இருக்கிறோம்.

அவரோட வழிகாட்டுதலும் இந்த உணவுத் திருவிழாவின் வெற்றிக்கு ஒரு காரணம். எங்க குழுவில் இப்ப சுமார் 150 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித் திறமை இருக்கும். ஆனா, அதை வெளிக்காட்டும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதை உத்தேசித்து எங்கள் சிறப்பான சமையலை அடிப்படையாக்கி சில வருடங்கள் முன் லைவ் உணவுத் திருவிழா நடத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நாங்க உணவுத் திருவிழாவினை செய்து வந்தோம். இடையில் கொரோனா நேரத்தில் நடத்த இயலவில்லை. இப்போது எங்கள் நகரத்தார் சங்கத்துடன் இணைந்து செட்டிநாடு சந்தை என்ற இந்தக் கண்காட்சியினை செய்கிறோம்.

ஒரு குடும்பத்தில் எப்படி உபசரித்து உணவுகளை அளிப்பார்களோ அப்படி நாங்களே தயார் செய்து எங்கள் கைகளால் அவற்றை பரிமாறும் போதும் அதற்காக பாராட்டுகள் பெறும்போதும் அப்படி ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. அதை விட எங்கள் உழைப்பில் பெற்ற தொகை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திருமணத்திற்கு உதவித் தொகையாக பயன்படும்போது இதற்காக உழைத்த எங்கள் அனைவரின் மனங்களும் நிறைகிறது” என்றார் வள்ளி நாயகி.மகளிர் சங்கம் என்றால் வெறும் நகைகளும் பட்டுப்புடவைகளும் ஆட்டமும் கொண்டாட்டமும் என்றில்லாமல் தங்களுக்கு கைவந்த கலையான சமையல் மூலம் தேவை உள்ளவர்களின் நலனுக்கு உதவுவது என்பது பாராட்டுக்குரியது.

தொகுப்பு: சேலம் சுபா

The post சேலத்தை கலக்கிய செட்டிநாட்டு சமையல் விழா! appeared first on Dinakaran.

Tags : Chettinad cooking festival ,Salem ,Kumkum Doshi ,
× RELATED கிச்சன் டிப்ஸ்