×

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!!

அபுதாபி: அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபியில் பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் பயணத்தின் போது அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் தொடர்ந்து துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்று அவர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

இதனிடையே அபுதாபியின் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்டில் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு உள்ள அபுதாபியில் புதிய இந்து கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 27 ஏக்கரில் அமைந்துள்ள கோயிலுக்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் பாரம்பரிய முறைப்படி கற்களால் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 25,000 கற்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் கற்களை செதுக்கியுள்ளனர்.

கட்டுமானத்திற்கு பயன்படுத்த பெரும்பாலான சிவப்பு நிற மணல் கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கோயில் உட்புற கட்டுமானத்தில் 40,000 கன அடி பளிங்கு நிற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் சிற்பங்களைச் செதுக்கி உள்ளனர். கோயில் முகப்பில் திறமையான கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்டில் 7 அமீரகங்கள் உள்ளதை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 12 குவி மாடங்கள், 402 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் ராமாயணம்,மகாபாரத கதைகளின் காட்சிகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோயிலின் கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயண் அறக்கட்டளை ரூ.900 கோடியில் கோயிலை கட்டியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் 3 கோயில்கள் உள்ளன. அந்த கோயில்கள் துபாயில் அமைந்துள்ளன. அபுதாபியின் முதலாவது இந்து கோயிலான இது வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மிக பெரிய கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Modi ,United Arab Emirates ,ABU DHABI ,President of ,Sheikh Mohammed bin Zayed ,Narendra Modi… ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!