×

5 அடி உயரத்துக்கு உயர்த்தும்போது ஜாக்கி விலகியதால் கோயில் மண்டபம் இடிந்து விழுந்ததில் உ.பி. வாலிபர் உடல் நசுங்கி பரிதாப சாவு: நங்கநல்லூர் ராம்நகரில் பரபரப்பு

ஆலந்தூர்: நங்கநல்லூர் ராம் நகரில் 5 அடி உயரத்துக்கு உயர்த்தும்போது ஜாக்கி விலகியதால் கோயில் மண்டபம் இடிந்து விழுந்ததில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். சென்னை நங்கநல்லூர், ராம்நகரில் உத்தர குருவாயூரப்பன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இந்த கோயில், சாலையை விட மிகவும் தாழ்ந்து காணப்படுறது.

இதனால் மழைகாலங்களில் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பக்தர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். இதையடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம் கோயிலை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஜாக்கி மூலம் தூக்கி நிலைநிறுத்துவதற்கான பணி கடந்தாண்டு தொடங்கியது. கர்ப்பக்கிரஹம், உள் சன்னதி அனைத்தும் தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயரம் உயர்த்தப்பட்டது. கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்தது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மண்டபத்தில் பின் பகுதியை ஜாக்கி மூலமாக உயர்த்தும் பணி நேற்று நடந்தது. இதற்கான பணியில் சில வடமாநில தொழிலாளர்கள் உள்பட சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஜாக்கிகள் விலகியதால் பின்புற மண்டபம் திடீரென சரிந்து கீழே விழுந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேர், அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் ஒரு தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த தொழிலாளியை மீட்டு கோயில் நிர்வாகத்தினர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர் உத்தரபிரதேச மாநிலம் கேஷ் வாரி நைனாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிராம் (21) என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய பாதுகாப்பு வசதி இன்றி கோயிலை உயர்த்தும் பணி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவறான தகவல் கொடுத்த நிர்வாகி
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து புகார் வந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கோயில் நிர்வாகிகளில் ஒருவரான பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர், ஹரிராமுக்கு லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவர் சிகிச்சை முடிந்து தங்கும் இடத்திற்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்’ என கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் திரும்பி சென்றனர். சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிராம் இறந்ததாக தகவல் வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணை நடத்த வந்த எஸ்.ஐ கோபாலிடம் உண்மையை மறைத்து தவறான தகவல் கொடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 5 அடி உயரத்துக்கு உயர்த்தும்போது ஜாக்கி விலகியதால் கோயில் மண்டபம் இடிந்து விழுந்ததில் உ.பி. வாலிபர் உடல் நசுங்கி பரிதாப சாவு: நங்கநல்லூர் ராம்நகரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nanganallur Ramnagar ,ALANTHUR ,Uttar Pradesh ,Nanganallur Ram Nagar ,Uttara Guruvayurappan Temple ,Nanganallur, Ramnagar, Chennai ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...