×

இன்று முதல்வர் வருகையையொட்டி, வனப்பகுதியில் ரோந்து சென்றபோது வனவிலங்குகளுக்காக வைத்த மின்சார வலையில் சிக்கி அதிரடிப்படை காவலர் பலி

*தெலங்கானாவில் சோகம்

திருமலை : தெலங்கானாவில் இன்று முதல்வர் வருகையையொட்டி, மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ரோந்து சென்ற அதிரடிப்படை காவலர் வனவிலங்குகளுக்காக வைத்த மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக பலியானார்.தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் மற்றும் அமைச்சர்கள் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் மேடிகட்டா தடுப்பணையை பார்வையிட இன்று செல்கின்றனர்.

இந்நிலையில், அந்த பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மகாதேவப்பூர், கடாரம், காலேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருகையையொட்டி நேற்று முதல் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் தடுப்பு அதிரடிப்படை (கிரேஹவுண்ட்ஸ்) மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, வன விலங்குகளை கொல்ல கடத்தல்காரர்கள் அமைத்திருந்த மின்வலை கம்பிகளில் சிக்கி அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அதிரடிப்படை பிரிவு காவலர் பிரவீன் என்பவர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் காவலர் பிரவீனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரவீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, இறந்தவரின் உடல் பூபாலப்பள்ளி மாவட்ட மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காவலர் பிரவீன் உடலை காண பூபாலபள்ளி மாவட்ட மருத்துவமனை பிணவறைக்கு ஏராளமான போலீசார் மற்றும் கிரேஹவுண்டு தனிப்படை போலீசார் வந்தனர். காவலர் மறைவுக்கு முதல்வர் ரேவந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நடந்தது என்ன? என முழுமையாக விசாரிக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பணியின் போது உயிர்கள் பலியாவது வருத்தமளிக்கிறது.
மின் ஒயர்களை வீசியவர்களை பிடிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ரேவந்த் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மின் கம்பிகளை பொருத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வலையில் சிக்கி அதிரடிப்படை காவலர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்று முதல்வர் வருகையையொட்டி, வனப்பகுதியில் ரோந்து சென்றபோது வனவிலங்குகளுக்காக வைத்த மின்சார வலையில் சிக்கி அதிரடிப்படை காவலர் பலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Task Force ,Thirumalai ,Telangana ,Maoists ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...