×

மங்கலம்பேட்டை பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுத்த வேளாண் களப்பயணம்

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விவசாய பயிர்கள் உற்பத்தி மற்றும் வளர்ப்பு குறித்த கற்றல் திறனை மேம்படுத்த வேளாண் களப்பயணம் மேற்கொண்டனர்.தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக தொழிற்கல்வி பயிலும் அனைத்து பள்ளி முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் தலா 3 களப்பயணம் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் குறைபாடு நீங்க, தனித்திறன் கற்றல்திறன் மேம்பட, சுய வேலைவாய்ப்பை அதிகரிக்க, பள்ளி அளவில் தேர்ச்சி பெற்று மேற்கல்வி பயில இத்திட்டம் மாணவ சமுதாயத்திற்கு பெரிதும் பயன்படும் திட்டமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை மாணவர்கள் 25 பேர் களப்பயணமாக நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலையில் உள்ள செம்மேடு தோட்டக்கலை பண்ணையில் வாசனைப் பயிர் நாற்றங்கால் உற்பத்தி, அழகு தாவரம் உற்பத்தி, உயிர் உரம் தயாரிக்கும் முறை, செடிகள் ஒட்டு கட்டும் முறை, பசுமை குடில், கண்ணாடி குடிலில் உள்ள தாவர வளர்ப்பு முறை , பட்டுப்புழு வளர்ப்பு, காபி, மிளகு, காய்கறி பயிர், மூலிகை பயிர் சாகுபடி பற்றி அறிய நேற்று களப்பயணம் மேற்கொண்டனர்.

மேலும் மாணவர்கள் ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் காளான் வளர்ப்பு, மிளகு நாற்றங்கால், ஊடு பயிர் சாகுபடி, மண்புழு உரம் தயாரித்தல், ரோஜா நாற்றங்கால் உற்பத்தி, பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா, காபி வாரியத்தில் காபி ரகங்கள் வளரும் இடங்கள் , காபி பதப்படுத்தும் முறை மற்றும் தரம் பிரித்தல் முறை போன்றவற்றையும், பண்ருட்டி பகுதியில் உள்ள முந்திரி பதப்படுத்துதல் தொழிற்சாலையில் முந்திரி பதப்படுத்துதல், தரம் பிரித்தல் பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் காய்கறி பயிர்களில் புதிய ரகம் உற்பத்தி முறையும், நாற்றங்கால் வகைகளும், காய்கறி விதை உற்பத்தி முறையும், மா, பலா ஒட்டு கட்டுதல் முறை ஆகியன பற்றியும் அறிய களப்பயணம் மேற்கொண்டு, பாடம் தொடர்பான கற்றல் திறனை மேம்படுத்தப்பட்டது.

The post மங்கலம்பேட்டை பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுத்த வேளாண் களப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Mangalampet ,Mangalampet Government Boys High School ,Tamil Nadu Government School Education Department ,Dinakaran ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்