×

தவறான சிகிச்சையால் இளம்பெண் பாதிப்பு

*நடவடிக்கை எடுக்க கோரி மனு

ஈரோடு : தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு உரிய நடவடிக்கை கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி, பிடிஓ அலுவலகம் பின்புறம் உள்ள பிரதீப்குமார் மனைவி அனுபல்லவி (25) கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரதீப் குமார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

எனக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022 பிப்ரவரி 22ம் தேதி தாளவாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதில், நான் உள்பட 8 பேர் கலந்து கொண்டோம். 28ம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். என்னை தவிர மற்ற 7 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டனர்.

ஆனால், எனக்கு மட்டும் சுய நினைவு திரும்பாததுடன், அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 25 நாள்கள் ஐசியூவில் இருந்தேன். அதன் பின்னரே எனக்கு சுய நினைவு வந்தது. தாளவாடியில் எனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது, இதயத்துக்கு செல்லும் அயோட்டா எனும் ரத்தம் செல்லுவதற்கான பகுதியை துண்டித்து விட்டதாகவும், அதை சரி செய்ய இயலாது என்றும், உயிருக்கு ஆபத்து என்றும் அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த ஓர் ஆண்டாக எனது தாயார் வீட்டில் வசித்து வருகிறேன். என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறேன். எனவே, தவறான அறுவை சிகிச்சை செய்தது குறித்து விசாரிப்பதுடன், நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான சிகிச்சையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

மனுவை பெற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) அலுவலகத்தினர் மற்றும் டாக்டர்களை வரவழைத்து விசாரிக்க உத்தரவிட்டார். உடனடியாக சில டாக்டர்கள் குழுவினர் வந்து, அனுபல்லவியிடம் விசாரித்து, தொடர் ஆலோசனைகள் வழங்குவதாக உறுதியளித்தனர்.

The post தவறான சிகிச்சையால் இளம்பெண் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Grievance Redressal Day ,Erode District ,Thalawadi ,Pradeep Kumar ,PTO ,
× RELATED ஈரோட்டில் 30ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்