×

தஞ்சாவூர் அருகே துணிகரம் சுவரில் துளையிட்டு அடகு கடையில் கொள்ளை முயற்சி

*லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் நகைகள் தப்பியது

பட்டுக்கோட்டை : தஞ்சாவூர் அருகே சுவரில் துளையிட்டு நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியது.தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் மெயின் ரோட்டில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருபவர் ராஜேந்திரன் (55). இவர், வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை ராஜேந்திரன் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரில் 3 அடி உயரம், 3 அடி அகலத்திற்கு துளையிட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக ராஜேந்திரன் மதுக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு அதன் வழியாக கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், முதலில் கடைக்குள் வைத்திருந்த சிசிடிவி கேமராவை வேறு பக்கமாக திசை திருப்பி உள்ளனர். பின்னர் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்த ஹாட் டிஸ்கையும் எடுத்துக்கொண்டதோடு கடைக்குள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர்.

இதில் லாக்கரை உடைக்க முடியாததாலும், துளையிட்ட ஓட்டை வழியாக லாக்கரை கொண்டு செல்ல முடியாததாலும் அங்கேயே விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பியது தெரிய வந்தது. தஞ்சாவூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post தஞ்சாவூர் அருகே துணிகரம் சுவரில் துளையிட்டு அடகு கடையில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur district ,Madhukur ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...