புதுச்சேரி, பிப். 13: புதுவையில் பொழுதுபோக்கு இடங்களை போன்று திருமணம், விசேஷ நிகழ்ச்சிகளிலும் பஞ்சு மிட்டாய் சப்ளைக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பஞ்சு மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அதில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாயில் ரோடமின் பி என்ற விஷநிறமி இருப்பது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய பரிசோதைனயில் தெரியவந்தது. ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷநிறமியை பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்த துறை அதிகாரிகள், 20 வடமாநில வியாபாரிகளை பிடித்து அவர்களை முறையான அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட நிறமியை மட்டுமே பயன்படுத்தி வியாபாரம் செய்ய அறிவுறுத்தினர்.
இவ்விவகாரம் தொடர்பாக கவர்னர் தமிழிசையும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்த நிலையில் முறையான அனுமதியை பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் பெறும் வரையில் இதை விற்பனை செய்ய தடை விதிப்பதாக அதிரடியாக அறிவித்தனர். பஞ்சு முட்டாய் மூலப் பொருட்களை துறையின் ஒப்புதலோடு பயன்படுத்தி வியாபாரம் செய்ய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பீச், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் இந்த பஞ்சு மிட்டாய்கள் கடந்த ஒரு வாரமாக விற்கப்படாத நிலையில் திருமணங்கள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் மண்டபங்களில், இவ்விழாக்கள் நடைபெறும் இடங்களில் பஞ்சு மிட்டாய்களை கேட்டரிங் நிறுவனங்கள் சப்ளை செய்தன.
இதுபற்றியும் உணவு பாதுகாப்புத் துறையின் கவனத்துக்கு சமூக அமைப்புகள் கொண்டு சென்ற நிலையில் அங்கும் ஆய்வுகளை மேற்கொண்ட துறை அதிகாரிகள் தற்போது அங்கும் தடை போட்டுள்ளனர். அதாவது திருமணம் மற்றும் வரவேற்பு உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் பஞ்சு மிட்டாய்கள் வழங்க கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது இவற்றை வழங்கும் கேட்டரிங் நிறுவனம் அதற்குரிய லைசென்சு (உரிமம்) பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
The post திருமணம், விசேஷ நிகழ்ச்சிகளில் பஞ்சு மிட்டாய் சப்ளைக்கு தடை appeared first on Dinakaran.
