×

ராஜாக்கமங்கலம் அருகே கைதான உண்டியல் கொள்ளையன் மீது 7 வழக்குகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ராஜாக்கமங்கலம், பிப்.13 : ராஜாக்கமங்கலம் அருகே கோவில்புரத்தில் வெற்றி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன் தினம் அதிகாலை சுமார் 1 மணியளவில் மர்ம நபர் புகுந்து உண்டியலை கொள்ளையடிக்க முயன்றார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் மார்த்தாண்டம் அருகே உள்ள அண்டுக்கோடு செம்பிராவிளையை சேர்ந்த ரகு (46) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரகுவிடம் நடந்த விசாரணையில், இவர் மீது ஏற்கனவே மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் 7 திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. டீ கடையில் வேலை பார்த்து வந்த ரகு, இரவு நேரங்களில் கோயில்களில் உண்டியல்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல் கிடைக்கும் என்பதால், ரகுவை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post ராஜாக்கமங்கலம் அருகே கைதான உண்டியல் கொள்ளையன் மீது 7 வழக்குகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Vetri Vinayagar temple ,Kovilpuram ,Dinakaran ,
× RELATED ராஜாக்கமங்கலம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது