×

8 நாள் தீவிர தேடுதலுக்குப் பின் சைதை துரைசாமி மகனின் சடலம் மீட்பு: சட்லஜ் ஆற்றின் பாறைக்கடியில் சிக்கியிருந்தது

சிம்லா: இமாச்சலின் சட்லஜ் ஆற்றில், 8 நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. சென்னை மாநகராட்சி அதிமுக முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வந்த வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு தனது நண்பர் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். இமாச்சலின் லாஹஸ் ஸ்பிதி பகுதியைச் சேர்ந்த டிரைவர் தன்ஜினின் காரில் காசா பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் சிம்லாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கசாங் நல்லா பகுதியில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி, 200 மீ ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. காரின் டிரைவர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டார். நண்பர் கோபிநாத் படுகாயமடைந்துடன் மீட்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்தது. தனது மகன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்தார். மேலும், உள்ளூர் மக்கள் உதவுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, போலீசார், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள், ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் என தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 8 நாள் தேடுதலுக்குப் பிறகு நேற்று மதியம் 2 மணி அளவில் சட்லஜ் ஆற்றின் பாறைக்கடியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஸ்கூபா வீரர்கள், வெற்றி துரைசாமியின் சடலத்தை மீட்டு கொண்டு வந்தனர். வெற்றியின் சடலம் சிம்லா இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என கின்னார் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post 8 நாள் தீவிர தேடுதலுக்குப் பின் சைதை துரைசாமி மகனின் சடலம் மீட்பு: சட்லஜ் ஆற்றின் பாறைக்கடியில் சிக்கியிருந்தது appeared first on Dinakaran.

Tags : Saidai Duraisamy ,Sutlej river ,Shimla ,Vetri Duraisamy ,Chennai Mayor ,Saithai Duraisamy ,Himachal ,AIADMK ,Mayor ,Chennai Municipal Corporation and ,Humanity Free IAS Training Center ,Dinakaran ,
× RELATED சிறுகதை-என் உயிரிலே நீ கலந்தாய்…