×

அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? சென்னை மாநகராட்சி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் 10 மாடியில் கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணியில் ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் எனவும் சி.எம்.டி.ஏ. தரப்பு வழக்கறிஞர் புவனேஷ்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திட்ட அனுமதி இல்லாமல் கடந்த ஜூலை முதல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எப்படி அனுமதிக்கப்பட்டது என்று சிஎம்டிஏவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணிக்க வேண்டியது மாநகராட்சி பொறுப்பு தான் என்றார். அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி, சாலையின் குறுக்கே மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை போடாமல் இருப்பதை சுற்றுக்காவல் போலீசார் கண்காணித்து வருகிறார்கள் என்றார்.

இதையடுத்து, தாமாக முன்வந்து சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கட்டிட அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஏற்படும் ஒலி மாசுவை கண்காணிக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா, இல்லையா என்பது குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டாத தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நடைமுறைகள் உள்ளதா, இல்லையா என்பது குறித்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? சென்னை மாநகராட்சி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Court ,MGM Hospital ,St. Mary's Road, Alwarpettai, Chennai ,ICourt ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!