×

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி தலைவரை கைது செய்யக்கோரி சாலைமறியல்: மனைவி தீக்குளிக்க முயற்சி

திருவொற்றியூர்: மணலிபுதுநகர் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக் கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடுத்த மணலிபுதுநகர் அருகே விச்சூர் முதல்நிலை ஊராட்சி உள்ளது. இதன் தலைவராக சங்கர் என்பவரும், துணைத் தலைவராக வைதேகி என்பவரும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற துணை தலைவர் வைதேகியின் கணவரான அதிமுக பிரமுகர் சுமன் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி விச்சூரில் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை மணலிபுதுநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, கணவர் சுமனின் கொலைக்கு விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்தான் காரணம் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி வைதேகி, மணலி புது நகர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்து வருகிறார். இந்நிலையில், வைதேகி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காலை மணலிபுதுநகர் – பொன்னேரி நெடுஞ்சாலையில் ஒன்று கூடினர். பின்னர் விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கருக்கு சுமன் கொலையில் தொடர்பு உள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரி வைதேகி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சங்கரை கைது செய்ய வேண்டும் என்று வைதேகியும், அவரது தாயும் தரையில் அழுது புரண்டனர். மேலும் உறவினர்கள் சிலர் பாட்டிலில் கொண்டு வந்த மண் எண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மணலி காவல் சரக உதவி ஆணையர் மகிமை ராஜன், மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜு ஆகியோர் வைதேகி மற்றும் அவரது உறவினர்களை சமாதானம் செய்தனர்.

அப்போது, மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு மோசடி குறித்து கேள்வி எழுப்பிய சுமனை, தீர்த்துக் கட்டி விடுவேன் என பலமுறை ஊராட்சிமன்ற தலைவர் சங்கர் மிரட்டியுள்ளார். கூலிப்படையை வைத்து சுமனை கொலை செய்த சங்கரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி தலைவரை கைது செய்யக்கோரி சாலைமறியல்: மனைவி தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tiruvottiyur ,panchayat council ,Manaliputhunagar ,Vichoor Primary ,Panchayat ,Chennai ,
× RELATED வலுவில்லாத கூட்டணியால் தோல்வி: ஆலோசனை...