×

கஞ்சா தருவதாக அழைத்து வெட்டினர் மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு: 3 ரவுடிகள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியில் கஞ்சா இருப்பதாக வரவழைத்து, மாநகராட்சி தற்காலிக ஊழியரை வெட்டி செல்போன், பணம் பறித்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, நேரு நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (25), சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வெற்றிவேல், வியாசர்பாடியைச் சேர்ந்த அஜய் என்பவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கஞ்சா வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அஜய், வியாசர்பாடி முல்லைநகர் சுடுகாடு அருகே இருப்பதாகவும், நேரில் வந்தால் கஞ்சா பொட்டலங்கள் தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அஜய் உள்ளிட்ட 4 பேர் வெற்றி வேலை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500ஐ பறித்துக்கொண்டு கத்தியால் தலையில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வெற்றிவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மிக்கி மவுஸ் (23), ராஜி என்ற ஜோஸ்வா (20), ஆகாஷ் என்ற ஆறுச்சாமி (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான அஜய் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கஞ்சா தருவதாக அழைத்து வெட்டினர் மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு: 3 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vyasarpadi ,Vetrivel ,Nehru Nagar, Vyasarpadi ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து