×

வேங்கைவயல் வழக்கு: அதிகாரி மாற்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், விசாரணை அதிகாரியாக திருச்சியை சேர்ந்த டிஎஸ்பி பால்பாண்டி இருந்தார். 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இதுவரை 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புசட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்மை அறியும் சோதனை நடத்த கோரும் 10 பேரும் தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை எனத்தெரிவித்ததால் சிபிசிஐடி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார். இந்தநிலையில், விசாரணை அதிகாரி பால்பாண்டி நேற்று திடீர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் பால்பாண்டி நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்து வந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

The post வேங்கைவயல் வழக்கு: அதிகாரி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Vengkaiweil ,Pudukkottai ,Pudukkottai District ,Vengaivaal Adhiravidar Residence ,CBCID ,Trichy ,Wangaiwaal ,Dinakaran ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...