×

துணைவேந்தர், பதிவாளர் மீதான முறைகேடு புகார் உறுதி பெரியார் பல்கலை.யில் மீண்டும் ஆய்வு: நிதிக்குழு அனுமதியின்றி தொடங்கப்பட்ட  புதிய படிப்புகள், மாணவர் சேர்க்கை, கட்டணம் தொடர்பாக விசாரணை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். மேலும், பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு முதல் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக, உள்ளாட்சி நிதி தணிக்கைக்குழு துணை இயக்குநர் நீலாவதி தலைமையிலான குழுவினர், கடந்த இரு வாரத்திற்கு முன்பு 10 நாட்கள் ஆய்வு செய்தனர்.

அதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதுடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட தணிக்கை தடை சட்டத்திற்கு புறம்பாக நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சுமார் ரூ.9.50 கோடி அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி பழனிசாமி குழுவினர் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், துணைவேந்தர் ஜெகநாதன், அந்த உத்தரவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உரிய அனுமதி மற்றும் ஒப்புதல் இன்றி, பதிவாளர் தங்கவேல் தலைவராக உள்ள கணினி அறிவியல் துறையின் கீழ், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து புதிய படிப்புகள் தொடங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நேற்று உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்கு வந்து திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். கணினி அறிவியல் துறைக்கு சென்ற அவர்கள், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது, புதிய படிப்புகள் தொடங்கியது, மாணவர் சேர்க்கை, கட்டணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், அதுசார்ந்த ஆவணங்களை சேகரித்தனர்.

அதன்படி பாஸ்டன் நிறுவனத்துடன் சேர்ந்து எம்எஸ்சி., டேட்டா சையின்ஸ், ஸ்கோபிக் நிறுவனத்துடன் சேர்ந்து பி.வோக்., ஏஆர்விஆர்., படிப்புகள், டேலண்ட் எட்ஜ் நிறுவனத்துடன் சேர்ந்து தொலைதூர கல்வி இயக்கம் மூலமாக ஆன்லைனில் புதிய படிப்பு ஆகியவை நடத்தப்பட்டுள்ளது. இப்படிப்புகளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமாக மட்டும் ரூ.54 கோடி வரை பெறப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த 3 புதிய படிப்புகளையும் தொடங்க, நிதிக்குழுவின் ஒப்புதல் எதுவும் பெறாமல் நடத்தப்பட்டிருப்பது, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில் ஒரு படிப்புகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதியும் பெறப்படவில்லை. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கோப்புகள் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த தணிக்கை தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது மீண்டும் நிதி தணிக்கை அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்கு வந்து ஆய்வில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* துணைவேந்தர், பதிவாளரை நீக்கக்கோரி 16ம் தேதி போராட்டம்
இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட செயலாளர் பவித்ரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், கணினி உபகரணங்கள் கொள்முதல், இணையதள தளவாடங்கள் கொள்முதல், இணையதள சேவை கட்டமைப்புகள் உருவாக்குதல், பட்டியலின மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் முறைகேடு, அமேசான் இணைய முறைகேடு, வளாக பராமரிப்பில் முறைகேடு என எழுந்த புகார்களில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது 6 குற்றச்சாட்டுகளும், பதிவாளர் தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ்த்துறைத்தலைவர் பெரியசாமி மீது 5 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தங்கவேலை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலர் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் துணைவேந்தர், அரசின் ஆணையை செயல்படுத்த மறுத்து வருகிறார். எனவே, அரசின் உத்தரவை மதிக்காத துணைவேந்தர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திட வேண்டும். ஊழல் துணைவேந்தரும், பதிவாளரும் இன்று (13ம் தேதி) நடத்தும் ஆட்சிப்பேரவை கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வரும் 16ம் தேதி பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

The post துணைவேந்தர், பதிவாளர் மீதான முறைகேடு புகார் உறுதி பெரியார் பல்கலை.யில் மீண்டும் ஆய்வு: நிதிக்குழு அனுமதியின்றி தொடங்கப்பட்ட  புதிய படிப்புகள், மாணவர் சேர்க்கை, கட்டணம் தொடர்பாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Jeganathan ,Booter Foundation ,Salem Periyar University ,Thangavel ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...