×

சோழவரம் ரவுடிகள் என்கவுன்டர் விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: சிபிசிஐடிக்கு பரிந்துரைத்துள்ளதாக போலீஸ் தகவல்

புழல்: சோழவரம் அருகே இரு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றும்படி டிஜிபிக்கு பரிந்துரைத்திருப்பதாக ஆவடி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய சண்டே சதீஷ், முத்து சரவணன் ஆகியோர் சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருந்தனர். இவர்கள் இருவரையும் பிடிக்க சென்றபோது, தப்பிக்க முயன்றதாக கூறி பூந்தமல்லி காவல் நிலைய துணை ஆணையர் ஜவஹர் தலைமையிலான காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் காவல்துறை நடத்திய என்கவுன்டரில் சந்தேகம் உள்ளது, தனது மகன் தப்பிக்க முயற்சி செய்ததால் தான் சுட்டு கொல்லப்பட்டார் என்று காவல்துறை கூறும் தகவல் தவறு. காவல்துறைக்கு எதிரான வழக்கை அவர்களே விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றும்படி பரிந்துரைத்து தமிழக டிஜிபிக்கு ஆவடி காவல் ஆணையர் ஜனவரி 18ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு இன்னும் டிஜிபியிடமிருந்து பதில் வரவில்லை என்பதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

The post சோழவரம் ரவுடிகள் என்கவுன்டர் விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: சிபிசிஐடிக்கு பரிந்துரைத்துள்ளதாக போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,CBI ,CBCID ,Avadi Police ,Court ,DGP ,AIADMK ,Parthiban ,Patiyanallur, Chennai ,CBCIT ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...