×

தமிழக சட்டப்பேரவையில் ஆர்.என்.ரவி பேசியதை வீடியோவாக வெளியிட்டது ஆளுநர் மாளிகை: அவை குறிப்பிலிருந்து நீக்கிய பகுதிகளும் இடம்பெற்றதால் விதிமீறலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதை ஆளுநர் மாளிகை வீடியோவாக வெளியிட்டுள்ளது. அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக வெளியிட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் சில கருத்துகளை மட்டும் பேசிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உட்கார்ந்து விட்டார். இதனால் அவை பரபரப்புக்குள்ளானது. இதை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுவதும் வாசித்து முடித்தார்.

பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘‘இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். வேறு எவையும் அவைக்குறிப்பில் இடம்பெறாது’’ என்றார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் இல்லாமல் பேசியது அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை ஆளுநர் பேசும் வீடியோவை ஆளுநர் மாளிகை நேற்று சப்-டைட்டிலுடன் வீடியோவாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை வெளியிடக்கூடாது என்பது சட்டமன்ற விதி.

எனவே ஆளுநர் அவை விதியை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்று ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 9.2.2024 அன்று அரசிடமிருந்து ஆளுநரின் வரைவு உரை பெறப்பட்டது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்தன. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் மற்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திட வேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்து கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பாகுபாடான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் ஆளுநர் உரையில் இடம் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது. ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்ததை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பை கேலிக்குரியதாக்கி விடும் என்ற காரணத்தால் உரையை நேற்று முழுமையாக படிக்க இயலாமைக்கான விளக்கத்தை ஆளுநர் தெரிவித்தார். அதன் பிறகு ஆளுநரின் முழு உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் வாசித்தார். ஆளுநர், உரை முடியும் வரை அமர்ந்திருந்தார்.

சட்டப்பேரவை தலைவர், ஆளுநரின் உரையை வாசித்து முடித்தவுடன், நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்ட படி, ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். அச்சமயம், சட்டப்பேரவை தலைவர் ஆளுநருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மற்ற கருத்துகளோடு நாதுராம் கோட்சே பின்பற்றுபவர் என தெரிவித்தார். சட்டப்பேரவை தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால் தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்துவிட்டார். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக சட்டப் பேரவை தலைவர் தனது நீண்ட விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும் மற்றும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார். இவ்வாறு ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழக சட்டப்பேரவையில் ஆர்.என்.ரவி பேசியதை வீடியோவாக வெளியிட்டது ஆளுநர் மாளிகை: அவை குறிப்பிலிருந்து நீக்கிய பகுதிகளும் இடம்பெற்றதால் விதிமீறலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Governor's House ,RN Ravi ,Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Governor ,Tamil Nadu Legislative ,Assembly ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்