×

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: சென்னை கடற்கரை இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையை மேல்மருவத்தூர் வரை நீட்டித்து இயக்க சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் மூலமாக தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பணி நிமித்தமாக சென்னை சென்று வருகின்றனர். இதில், பள்ளி – கல்லூரி மாணவ – மாணவியர், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அவர்களின் உறவினர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் அடங்குவர். இந்த மின்சார ரயில் பயணம் என்பது பேருந்து பயணத்தைவிட மிக எளிதானது. மேலும், கட்டணமும், பயண நேரமும் குறைவானது. அதேநேரத்தில், போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதுபோன்ற காரணங்களால் பஸ் போக்குவரத்தை விட இந்த ரயில் போக்குவரத்தை மிக அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செங்கல்பட்டு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் பயணிக்கும் மக்கள் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்படுத்துவதில்லை. செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர், பவுஞ்சூர், கடப்பாக்கம், அணைக்கட்டு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், மாணவ-மாணவிகளும், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள், தினந்தோறும் இந்த பகுதிகளிலிருந்து பஸ்கள் மூலமாகவும் அல்லது இருசக்கர வாகனத்தின் மூலமாகவும் செங்கல்பட்டு ரயில் நிலையம் வருகின்றனர். பின்னர், அங்கிருந்து மின்சார ரயில் பிடித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணி முடிந்த பின்னர் வீடு திரும்புகின்றனர். அவ்வாறு ஒரு நாளைக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினந்தோறும் சென்னை சென்று வருகின்றனர். இதில், சுமார் 1 லட்சம் பேர் செங்கல்பட்டை தாண்டிய மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை தினந்தோறும் இயக்கப்படும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகளில் சிலவற்றையாகிலும் காலை, மாலை முக்கியமான அலுவலக நேரங்களில் மட்டுமாகிலும் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் வரை மின்சார ரயில்களைை இயக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரு
கின்றனர். குறிப்பாக, மதுராந்தகம் ரயில் நிலையத்தை சுற்றிலும் உள்ள கருங்குழி, வேடந்தாங்கல், எல்.எண்டத்தூர், முதுகரை, ஜமீன் எண்டத்தூர், செய்யூர், பவுஞ்சூர், அணைக்கட்டு மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பயணிகளும் பயனடைவார்கள். இதேபோன்று, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, கீழ் அத்திவாக்கம், கயப்பாக்கம், சூனாம்பேடு, சித்தாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்களும் பயனடைவார்கள்.

இதேபோன்று, மதுராந்தகம் செங்கல்பட்டு இடையே உள்ள கருங்குழி, படாளம், ஒத்திவாக்கம், ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கும் வசதியாக இருக்கும். மேலும், தற்போதைய கால சூழ்நிலையில் சென்னை பெருநகரத்தில் வீட்டு வாடகை அதிகம், வாகன நெரிசல் போன்ற காரணங்களினால் புகை மாசு அதிகம் காரணமாக ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து தங்கள் குடியிருப்பை மாற்றி மதுராந்தகம், மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளில் குறைந்த வாடகையில் சுகாதாரமான சூழ்நிலையில் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள், தினந்தோறும் சென்னை சென்று பணி புரிந்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். தற்போது, இவர்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் இருந்து சாலை மார்க்கமாக மேல்மருவத்தூர், மதுராந்தகம் வழியாக பஸ்களிலோ இருசக்கர வாகனங்களிலோ செங்கல்பட்டு வரை சென்று அங்கிருந்து ரயில் பிடித்து செல்கின்றனர். இதனால், அவர்களின் நேரமும் பொருளாதாரமும் வீணடிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் இந்த மின்சார ரயில் சேவையினை செங்கல்பட்டின் தொடர்ச்சியாக அங்கிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல்மருவத்தூர் வரை இயக்க வேண்டும் என்கின்றனர். இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வாழும் பெரும்பாலான கூலி தொழிலாளர்கள், தினந்தோறும் சென்னை சென்று வேலை செய்து திரும்புகின்றனர்.

இதேபோன்று, இப்பகுதிகளில் அரசு கல்லூரி இல்லாததால் இப்பகுதி மாணவ, மாணவியரும் தினந்தோறும் சென்னைை சென்று படித்துவிட்டு வருகின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள், வியாபார ரீதியாக செல்பவர்கள் என ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னைக்கு பயணம் செய்கின்றனர்.எனவே, அவர்களின் நலம் கருதி ரயில்வே நிர்வாகம் சென்னை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சேவைகளை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

100 கிமீக்குள் மின்சார ரயில் சேவை: மின்சார ரயில் சேவை என்பது அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே இயக்கப்பட வேண்டும் என ரயில்வே சட்ட விதிகளில் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், சென்னை கடற்கரையில் இருந்து மேல்மருவத்தூர் வரை 93 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. எனவே, ரயில்வே துறையின் விதிகளின்படி அவர்கள் நிர்ணயத்துள்ள தூரத்திற்கு மிக குறைவான தூரத்திலேயே இந்த மதுராந்தகம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் பயனடைவார்கள்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் இன்று இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இதன் காரணமாக தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் ஆன்மீக பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேநேரத்தில், மேல்மருத்தூரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செல்படுவதால் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.

அலுவலகம் நேரத்தில் இயக்க வேண்டும்: விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுராந்தகத்தை மாலை 3 மணியளவில் வந்து, பின்னர் தாம்பரம் சென்றடைகிறது. அதேபோல், தாம்பரத்தில் இருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு மதுராந்தகம் வழியாக விழுப்புரத்தை அடைகிறது. விழுப்புரத்தில் இருந்து புறப்டும் நேரத்தை காலையில் அலுவலக நேரத்தில் இயக்கினால் தாம்பரம், சென்னை போன்ற இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியா இருக்கும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Chengalpattu ,Melmaruvathur ,Madhurandakam ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!