×

பாஜ மேலாண்மை குழு பயிலரங்கம் மோடி மீண்டும் பிரதமராக அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்: அண்ணாமலை ஆரூடம்

செங்கல்பட்டு: மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென்று அனைத்து மக்களும் விரும்புவதாக பாஜ பயிலரங்க நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பாஜ மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்‌கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பொறுப்பாளர் சுதாகர், நயினார் நாகேந்திரன், மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், சிறப்பு விருந்தினராக மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: திமுக 5 முறை ஆட்சி செய்துள்ளது. 5 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்த நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். பாஜவை சேர்ந்த நாங்கள் செய்த நலத்திட்டங்களைச் சொல்லி மக்களை சந்திக்கிறோம். நான் பாதயாத்திரை சென்று தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்த வகையில், பாஜவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் மோடிக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்.

மீண்டும் மூன்றாவது முறையும் மோடிதான் பிரதமராக வரவேண்டும் என அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். அதற்காக நாம் ஓய்ந்து விடக்கூடாது. நாம் அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும். இந்திய அளவில் 450 தொகுதிகளைப் பிடித்து மிகப்பெரிய தனிப்பெரும்பான்மையேடு நரேந்திர மோடியை பாரத பிரதமராக அமர வைக்கவேண்டும். புதுவை, தமிழகத்தில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு உரிய விகிதாச்சாரபடிதான் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜ மேலாண்மை குழு பயிலரங்கம் மோடி மீண்டும் பிரதமராக அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்: அண்ணாமலை ஆரூடம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Management Committee Workshop ,Modi ,Annamalai Arudam ,Chengalpattu ,Annamalai ,SRM University ,Katangolathur ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?