×

சென்னையில் அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரம் ஆல மரம் உள்பட 48 வகையான 1.22 லட்சம் மரக்கன்றுகள் நடவு

சோழிங்கநல்லூர்: அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரம் ஆல, அரச மரங்கள் உள்ளிட்ட 1,22,460 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மாநகராட்சி சார்பில் அடையாறு, கூவம் ஆற்றங்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவைகள் ஆற்றங்கரையோரம் பசுமை பரப்பை ஏற்படுத்தி நீர்வளத்தை அதிகரிக்கிறது.

சென்னை மாதிரியான அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் இது மாதிரியான முன்னெடுப்புகள் பெரும் பயனை தரும். இதை கருத்தில் கொண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரங்களில் கடல் பாதாம், பூவரசு, புங்கன், கடல் பூவரசு, கல்யாண முருங்கை, உதயம், மருத மரம், கடல் திராட்சை, மந்தாரை, புன்னை, முள்ளில்லா மூங்கில், தாழை, நாவல், வேம்பு, அரச மரம், ஆல மரம், மகிழம், சரக்கொன்றை, துலிப் மரம், அத்தி, அசோக மரம், மலை வேம்பு, மூங்கில், இலுப்பை, கொய்யா, அருநெல்லி, நெல்லி, கொடுக்காப்புளி, சப்போட்டா, பீநாறிச்சங்கு, மருதாணி, கருநொச்சி, நொச்சி, கோரான், ஆவாரம், எருக்கு, பதிமுகம், மயில் கொன்னை, செம்பருத்தி, நித்திய கல்யாணி, அரளி, மஞ்சள் அரளி, காட்டு கறிவேப்பிலை, கற்பூரவள்ளி, துளசி, வெட்டிவேர், அலையாத்தி உள்ளிட்ட 48 வகையான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவைகள் தற்போது ஓரளவுக்கு வளர்ந்து நிழல் தரும் பகுதியாக மாறியுள்ளது. குறிப்பாக, இதனருகில் சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கென பூங்கா அமைத்தும், அமைக்கப்பட்டும் வருகிறது. இதனால் மீண்டும் கூவம், அடையாறு போன்ற சென்னையின் முக்கிய நதிகள் உயிர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

கூவம் ஆற்றங்கரையோரம்: காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரை ராயபுரம் மண்டலம் கூவம் ஆற்றங்கரையோரங்களில் 2.12 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.73 கோடி மதிப்பில் 14,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை கூவம் ஆற்றங்கரையோரங்களில் 2.1 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14 ஆயிரத்து 300 மரக்கன்றுகள்.

தாய் மூகாம்பிகை பல் மருத்துவமனை கல்லூரி வளாகம் முதல் பாடிக்குப்பம் மயானபூமி வரை (அம்பத்தூர் மண்டலம்) கூவம் ஆற்றங்கரையோரங்களில் 1.3 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.04 கோடி மதிப்பில் 5000 மரக்கன்றுகள். வளசரவாக்கம் மண்டலத்தில் ரயில் நகர் பாலம் முதல் மாநகராட்சி எல்லை வரை, (வார்டுகள் 143, 144, 145, 146, 150) கூவம் ஆற்றங்கரையோரங்களில் 5.7 கி.மீ. நீளத்துக்கு ரூ.2.58 கோடி மதிப்பில் 16,000 மரங்கள் நடப்பட்டுள்ளன.
தற்போதைய இந்த திட்டத்தில் கூவம் ஆற்றங்கரையோரம் 11,296 மீ நீளத்தில் மொத்தம் 49,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

அடையாறு ஆற்றங்கரையோரம்: திரு.வி.க பாலம் முதல் அடையாறு பாலம் வரை 2.3 கி.மீ நீளத்திற்கு 23,785 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கோட்டூர்புரம் பாலம் முதல் அடையாறு ஆறு வரை 2.3 கி.மீ நீளத்திற்கு 23039 மரக்கன்றுகளும், விமான நிலைய ஓடுபாதை முதல் நந்தம்பாக்கம் பாலம் (ஆறு ஓடும் பாதை இடது புறம்) 3.9 கி.மீ நீளத்திற்கு 7536 மரக்கன்றுகளும், விமான நிலைய ஓடுபாதை முதல் நந்தம்பாக்கம் பாலம் (ஆறு ஓடும் பாதை வலது புறம்) 3.9 கி.மீ நீளத்திற்கு 6300 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில், அடையாறு ஆற்றங்கரைகளில் 12636 மீ நீளத்துக்கு 72660 பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.கூவம், அடையாறு ஆற்றங்கரையோரம் இதுவரை சுமார் 1,22,460 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், ராயபுரம் மண்டலத்தில் காயிதே மில்லத் பாலம் முதல் லஸ் பாலம் வரையும் மற்றும் நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரையும், கூவம் ஆற்றங்கரையின் சரிவுகளில் அலையாத்தி இனத் தாவர வகைகள் நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரம் ஆல மரம் உள்பட 48 வகையான 1.22 லட்சம் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Tags : Adyar ,Koovam ,Chennai ,Adyar, Koovam ,Chennai Rivers Restoration Trust ,Coovam ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...