×

தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் ரவி வெளியேற வேண்டும்: தலைவர்கள் கடும் கண்டனம்

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்) ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்தது மிகுந்த கண்டனத்திற்குரியது. உரை முடிந்து இறுதியில் தான் தேசியகீதம் பாடப்படும். அந்த மரபுக்கு மாறாக, தமிழக ஆளுநர் நடந்து கொண்டது தேசிய கீதத்தையே அவமதிக்கிற செயலாகும். மகாத்மா காந்தியில் தொடங்கி எவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரது நடவடிக்கைகளை பார்க்கிற போது, ஆளுநர் பதவிக்கே ஒரு அவமானச் சின்னமாக திகழ்கிறார். ஆளுநர் மாளிகையிலிருந்து அவர் என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள் தான் தமிழகத்தின் நன் நாளாகக் கருதப்பட வேண்டும்.

* வைகோ(மதிமுக பொதுச் செயலாளர்): கடந்த ஆண்டைப்போலவே பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு. ஆளுநர் அதனை மாற்றக் கோரியது திட்டமிட்ட சதியாகும்.

* அன்புமணி (பாமக தலைவர்): ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதே தான் இப்போதும் தொடர்ந்திருக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல், ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுநர் அலுவலகத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை. அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல.

* முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்): அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகள் உணர்வுகளையும் ஆளுநர் புறக்கணித்துள்ளார். அரசுடன் இணைந்து தயாரித்த உரையை வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல்.

* திருமாவளவன் (விசிக): திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம். ‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும்’ என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என எங்கள் தீர்மானத்தை வலியுறுத்துகிறோம்.

* செல்வப்பெருந்தகை (சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்): முதல்வரிடம் ஒரு கோரிக்கையாக தெலங்கானா போல் இந்த ஆளுநரை மாற்றும் வரை ஆளுநர் உரை இல்லாமல் பேரவையை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

The post தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் ரவி வெளியேற வேண்டும்: தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Tamil Nadu ,Assembly ,RN Ravi ,KS Azhagiri ,Tamil Nadu Congress ,President ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்