திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகம் வேலை வழங்கியிருந்தது. தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்ததால் தொழிற்சாலையில் 22 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர்கள் என 172 தொழிலாளர்கள் பணியாற்றிய வந்தனர். இந்நிலையில் முதலில் இருந்த நிர்வாகம் கைமாறி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிசிஏ நிர்வாகத்திற்கு சென்றது. இதனால் நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்களை புதியதாக வந்த தொழிற்சாலை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.
இதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 5 வருட காலமாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டம், கம்பெனிக்கு பூட்டு போடும் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன்னிலையில் திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையில் 10 முறையும், கோட்டாட்சியர் தலைமையில் 15 முறையும், மாவட்ட கலெக்டர் தலைமையில் 17 முறையும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இதுவரை சமூகத் தீர்வு ஏற்படவில்லை. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் 2 முறையும், சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் 4 முறையும், தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் 7 முறையும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இது வரை பணி வழங்காததால் முதலமைச்சர் தனிப்பிரிவில் 7 முறை மனு கொடுத்தனர்.
ஆனால் இதனையடுத்து அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்தும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிற்சாலை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இது வரை பணி வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ கண்ணன், ஏஐசிடியு மாநில செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், விவசாய சங்க தலைவர் ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாப் சந்திரன், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் சீனிவாசன், இஸ்மாயில், சரவணன் ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்த சென்றனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், ராம்குமார், உதயகுமார், நிர்வாகிகள் ச.ஞானகுமார், வி.பாலாஜி, நேசன், ஜோதி, சிற்றம் சீனிவாசன், எழிலரசன், ஒன்றிய கவுன்சிலர்கள் நா.வெங்கடேசன், யோகாநாதன் விசிக மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், குமார், யோகா, பாலாஜி ஆகியோர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்புக்காக வந்திருந்த திருவள்ளூர் போலீஸ் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, தாலுகா இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் மற்றும் போலீசார் தொழிலாளர்களையும், ஆதரவு தெரிவித்தவர்களையும் திடீரென கைது செய்தனர். எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களை போலீசார், குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வேனில் ஏற்றினர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
The post கார் தொழிற்சாலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் போராட்டம்: முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ கைது appeared first on Dinakaran.