×
Saravana Stores

கான்கிரீட் அமைத்து தற்காலிகமாக விரிவாக்கம்; ஒழுகினசேரி பழைய பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள்: தடுப்புகளை தாண்டி பயணம்

நாகர்கோவில்: ஒழுகினசேரி பாலத்தின் மேல் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு பால பணி முடிவடைந்ததை தொடர்ந்து பாத சாரிகள் நடப்பதற்காக அனுமதிக்கப்பட்டதை பயன்படுத்தி பைக் ஓட்டுனர்களும் தடுப்புகளை தாண்டி பயணித்தனர். நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் இரட்ைட ரயில் பாதைக்காக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளுக்காக கடந்த மாதம் 28ம்தேதி முதல் ஒழுகினசேரி சந்திப்பு வழியாக சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் நாகர்கோவில் மாநகரில் இருந்து வெளியேற வேண்டிய பஸ்கள், வாகனங்கள், நாகர்கோவில் நகருக்குள் வர வேண்டிய வாகனங்கள், பஸ்கள் அனைத்தும் அசம்பு ரோடு, புத்தேரி நான்கு வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அசம்பு ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒழுகினசேரியில் கூடுதல் தண்டவாளத்துக்கான பணிகளின் ஒரு கட்டமாக, தற்போது உள்ள பழைய ரயில்வே பாலத்தின் அருகில் பில்லர்கள் அமைத்து, தற்காலிகமாக சிறு கான்கிரீட் பாலம் (கல்வெட்டு பாலம்) தற்காலிகமாக அமைத்துள்ளனர். பழைய பாலத்தின் கீழ் பகுதியில் மண் தோண்டும் போது, பாலம் வலுவிழக்காமல் இருக்கும் வகையில் இந்த தற்காலிக கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டு, பழைய பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தின் கீழ், மண் தோண்டப்பட்டு, தண்டவாளம் அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன.

பழைய பாலத்தின் மேல் தற்காலிக கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, அதன் இருபுறமும் சாலையை பலப்படுத்தும் வகையில், தற்காலிக கான்கிரீட் பலகைகள் வைக்கப்பட உள்ளன. இந்த பணிகளும் தொடங்கி உள்ளன. கான்கிரீட் உறுதியானவுடன் அதன் மேல் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு பழைய பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிகிறது.

இன்னும் ஒரு வாரம் வரை உறுதி தன்மை சோதனை செய்யப்படும். அதன் பின்னர் வருகிற 20-ம் தேதி முதல் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்து இயக்கப்பட வாய்ப்பு உண்டு என அதிகாரிகள் கூறினர். ஆனால் கனரக வாகனங்கள் செல்லுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. இலகு ரக வாகனங்களை மட்டும் முதற்கட்டமாக அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பழைய பாலத்தின் மேல் இருந்த தடுப்பு கம்பிகளை பணியாளர்கள் அகற்றி இருந்தனர்.

இதை பயன்படுத்தி பைக்குகளும் சென்றன. காலை வேளையில் போலீசாரும் இல்லாததால் பழைய பாலம் வழியாக பைக்குகளில் சென்றவர்கள் முட்டி மோதி கடந்து சென்றனர். ஆனால் இந்த பகுதியில் சாலையின் இரு புறமும் இன்னும் தடுப்புகள் வைக்கப்பட வில்லை. பைக்கில் செல்லும் போது தடுமாறி விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும். வடசேரி ஆறாட்டு ரோடு வழியாக தான் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சென்றன. அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடும் சமயத்தில் நூற்றுக்கணக்கான பைக்குகள், ஆட்டோக்கள் நிற்கின்றன. அந்த நெரிசலை தவிர்ப்பதற்காக கிடைத்த சிறு வழியில் நுழைந்து சென்றதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

The post கான்கிரீட் அமைத்து தற்காலிகமாக விரிவாக்கம்; ஒழுகினசேரி பழைய பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள்: தடுப்புகளை தாண்டி பயணம் appeared first on Dinakaran.

Tags : NAGARGO ,ORNUKINESERI BRIDGE ,Oshuginaseri ,Nagarko ,
× RELATED கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலின் மேல்படுக்கை விழுந்து சிறுவன் காயம்!!